search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை தாங்க ஆளில்லாவிட்டாலும் தனித்துவம் பெற்ற போராட்டம்! - தலையங்கம்
    X

    தலைமை தாங்க ஆளில்லாவிட்டாலும் தனித்துவம் பெற்ற போராட்டம்! - தலையங்கம்

    ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் போராட்டத்திற்கு தலைமை தாங்க யாரும் இல்லாத நிலையிலும் மாணவர்களின் போராட்டம் தனித்துவம் பெற்று விட்டது.
    சென்னை:

    ஒட்டு மொத்த மாணவர் சமுதாயமும் இன்று உச்சரிக்கும் ஒரே வார்த்தை ஜல்லிக்கட்டு. தமிழர்களுக்கு இடையே உள்ள இன உணர்வை தட்டி எழுப்பியுள்ளது இந்த ஜல்லிக்கட்டு போராட்டம்.

    தடை காரணமாக 2 வருடங்களாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. எனவே இனி முற்றிலுமாக ஜல்லிக்கட்டை ஒழித்து விடலாம் என்று பீட்டா அமைப்பும் மத்திய அரசும் தப்பு கணக்கு போட்டு விட்டது.

    2 ஆண்டுகளாக பொறுத்திருந்த தமிழ் மாணவ சமுதாயம் இன்று பொங்கி எழுந்து விட்டது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருடந்தோறும் காணும் பொங்கல் அன்று நடத்தப்படும். எனவே அந்த 1 நாள் மட்டும்தான் போராட்டம் இருக்கும். அதன் பிறகு நிலைமை சகஜமாகி விடும் என்று ஆட்சியாளர்கள் கருதினர். ஆனால் நிலைமை வேறு விதமாகி விட்டது.

    எந்த நாளானும் பரவாயில்லை. எத்தனை நாளானாலும் பரவாயில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியே தீர வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் ஒரே லட்சியமாக உள்ளது. அந்த லட்சியம் நிறைவேறும் வரை போராட்ட களத்தில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என்று மாணவர்கள் அறிவித்து விட்டனர்.

    ஆனாலும் ஜல்லிக்கட்டு நடைபெறக்கூடாது என்ற வி‌ஷயத்தில் பீட்டாவும் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. ஆதாயம் இருப்பதால் தான் பீட்டா தனது கொள்கையில் உறுதியாக இருப்பதாக கூறும் மாணவர்கள் பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்பதையும் போராட்டத்தில் வலியுறுத்துகிறார்கள்.

    தலைமை தாங்க யாரும் இல்லாத நிலையிலும் இந்த மாணவர்களின் போராட்டம் தனித்துவம் பெற்று விட்டது. ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் சமாதான வார்த்தைகளில் மயங்காத மாணவர்கள் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று அறிவித்துள்ளனர். வாடிவாசல் திறக்கும் வரை வீடு வாசல் போக மாட்டோம் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். ஆட்சியாளர்களின் அரசியல் மாணவர் சமுதாயத்தினரிடையே எடுபடவில்லை.

    மாணவர்களுக்கு ஆதரவாக நாங்களும் களம் இறங்குவோம் என்று நடிகர்கள் அறிவித்தபோது மாணவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. எங்களது போராட்டத்தை யாரும் திசைதிருப்ப வேண்டாம். இந்த போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்வதாக யாரும் ஆதாயம் தேட வேண்டாம். இதை ஒட்டு மொத்த மாணவர் சமுதாயத்தின் எழுச்சியாகவே நாங்கள் பார்க்க விரும்புகிறோம் என்று மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    எனவே இது தலைமை தாங்குவதற்கு ஆளில்லாமல் நடக்கும் போராட்டம் என்பதை விட மாணவர்கள் எல்லோருமே இந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திச் செல்கிறார்கள் என்று தான் கருத வேண்டும். எனவேதான் இந்த போராட்டம் சோர்வு, தளர்வுகளுக்கு இடம் கொடுக்காமல் மிகுந்த எழுச்சியுடன் காணப்படுகிறது.

    மாணவர்களின் போராட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பொதுமக்களும் அவர்களுடன் இணைந்து போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர். ஏராளமான பெற்றோர் தங்கள் கைக்குழந்தைகளுடனும் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு சென்று ஆதரவு அளித்து வருகிறார்கள்.

    அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டத்தைவிட, சுய விளம்பரத்துக்காக நடிகர்கள் நடத்தும் போராட்டத்தை விட இன உணர்வுக்காக மாணவர்கள் நடத்தும் இந்த போராட்டம் மிகவும் வலிமையான போராட்டமாக மாறியுள்ளது.

    இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது அரசியல் கட்சிகள் தலைமை தாங்கி போராட்டம் நடத்தின. ஆனால் மாணவர் சமுதாயம் யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் இது போன்ற மாபெரும் போராட்டத்தை நடத்தி வருவது வரலாறாகவே பார்க்கப்படுகிறது.

    இன்றைய மாணவ சமுதாயம் மிகவும் விழிப்பானது. அவர்களை எந்த அரசியல் சக்திகளாலும் ஏமாற்ற முடியாது என்பது இந்த போராட்டம் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

    ஜல்லிக்கட்டு காளைகளுக்காக காளையர்களுடன் கன்னியர்களும் இந்த போராட்டத்தில் களம் இறங்கியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக ஒட்டு மொத்த தமிழ் இனமும் உள்ளது. இந்த போராட்டத்தின் மூலம் நமது கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை நிலைநாட்டுவதுடன் ஜல்லிக்கட்டையும் நிச்சயம் நடத்த முடியும் என்பதே ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நம்பிக்கையாகும்.
    Next Story
    ×