search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லட்சியத்தை வெல்ல குவியும் தமிழர்கள்
    X

    லட்சியத்தை வெல்ல குவியும் தமிழர்கள்

    தமிழர்களின் பாரம்பரிய உரிமையை மீட்டெடுக்க மாணவர்கள் தொடங்கிய ஜல்லிக்கட்டு உரிமை போராட்டம் மாபெரும் மக்கள் போராட்டமாக விசுவரூபம் எடுத்துள்ளது.


    தமிழர்களின் பாரம்பரிய உரிமையை மீட்டெடுக்க மாணவர்கள் தொடங்கிய ஜல்லிக்கட்டு உரிமை போராட்டம் மாபெரும் மக்கள் போராட்டமாக விசுவரூபம் எடுத்துள்ளது.

    விடுதலைக்காக தேசத் தந்தை மகாத்மா காந்தி தொடங்கிய அமிக்சை போராட்டம், சுதந்திரப் போராட்ட களத்தில் பொது மக்களை சுண்டி இழுத்தது. தன்னை அறியாமலே நாட்டு மக்களின் கால்கள் போராட்ட களம் நோக்கி வீறு நடை போட்டன.

    அந்தக் காலத்தில் காந்தி மகான் அறிவித்த அந்த புதுமையான போராட்டத்தை “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது பார்” என்று பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடி, பாடி பரவசம் அடைந்தான்.

    அந்த காந்தியும் இன்று இல்லை. பாரதியும் இன்று இல்லை. அந்த போராட்ட உணர்ச்சி களத்தை நேரில் பார்த்தவர்களும் இன்று இல்லை.

    21-ம் நூற்றாண்டில் நவீன அறிவியல் யுகம் இளைஞர்கள் மத்தியில் புகுந்து ஊடுருவி உள்ள நிலையில், இன்றைய இளைஞர்கள் அதே மாதிரியான போராட்டத்தை கையில் எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை மாணவர்கள் இன்று நாட்டு மக்களுக்கு உணர்த்தி விட்டனர். உரிமை கேட்டு சாதாரணமாக தொடங்கிய போராட்டம் வீரியத்துடன் அறவழியில் தொடர்வதால் அதன் வலிமை வீட்டுக்குள் இருப்பவர்களையும், வீதிக்கு இழுத்து வந்துள்ளது.

    ஓரிரு நாட்களில் ஓய்ந்து விடும் இந்த போராட்டம் என்றுதான் எல்லாரும் நினைத்தனர். ஆனால் மெரீனாவில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடல் அலையைப் போல் தினம், தினம் இளைஞர்கள் கூட்டம் ஆர்ப்பரித்து வருகிறது.


    வங்க கடலோரம் முழங்கும் சத்தம் ஆட்சியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் தூங்க விடாமல் தட்டி எழுப்பி வருகிறது. இரவில் கடல் மணலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள்.

    பொழுது புலர்ந்ததும் அது பல்லாயிரம், லட்சமாக திரள்கிறார்கள். 4-வது நாளான இன்றும் மக்கள் வெள்ளம் அப்படித்தான் திரண்டு உள்ளது.

    இன்று காலை 7 மணி முதலே போராட்ட களத்துக்கு இளைஞர்கள், மாணவர் அலை, அலையாக திரண்டு வந்தனர். இந்த போர்க் களத்தின் நுழைவு வாயிலாக கலங்கரை விளக்கமும், உழைப்பாளர் சிலையும் உள்ளன.

    போர்க்களத்தில் வியூகம் அமைத்ததில் இரண்டு மையப் புள்ளிகளை உருவாக்கி உள்ளனர்.

    ஒன்று விவேகானந்தர் இல்லம் எதிரே.

    மற்றொன்று குடிசை மாற்று வாரியம் எதிரில்.

    இந்த இரண்டு மையங்களும்தான் போர்க்களத்தின் தினசரி போக்கை நிர்ணயம் செய்கிறது. ஜெனரேட்டர் உதவியுடன் ஒலி பெருக்கிகள் அமைத்துள்ளனர்.

    அதில் உணர்ச்சிமிக்க, எழுச்சி மிகுந்த உரைகள், உணர்வை தட்டி எழுப்பும் கோ‌ஷங்கள் எழப்பப்படுகின்றன. இது லட்சக்கணக்கான இளைஞர்களை கரவொலி எழுப்பி ஆர்ப்பரிக்க வைக்கிறது.

    இளைஞர்கள் கூட்டத்தின் யுத்த சத்தம், வங்கக் கடலின் ஒலியையும் அடக்கியுள்ளது. தங்கள் இதயத்தில் கொந்தளிக்கும் உணர்வுகளை வார்த்தைகளாக வடித்து பதாகைகளில் கையில் ஏந்தியுள்ளனர்.

    அதில் மத்திய அரசையும், மாநில அரசையும் கடுமையாக விமர்சித்து தொங்கவிட்டுள்ளனர்.

    வேண்டும், வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற அவர்களது கோ‌ஷம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

    இந்த பேராட்ட களத்தில் ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளையும் வெளிப்படுத்தினார்கள். சிலர் மணலில் ஜல்லிக்கட்டு வரலாற்றை சிற்பங்களாக வடித்தனர்.

    சிலர் தார் ரோட்டில் ஓவியமாக வரைந்தனர்.

    காவேரியும் வேண்டும், ஜல்லிக்கட்டும் வேண்டும். தமிழ் ஈழமும் வேண்டும் என்று இளைஞர்களின் உணர்வுப்பூர்வமான வாசகங்களும் ஆங்காங்கே காணப்பட்டன.

    கலாச்சார மீட்புப் போல் என்பதாலோ என்னவோ, கிராம திருவிழாவில் தமிழர்கள் நடத்தும் சாகசங்கள் போல ஆங்காங்கே தாரை தப்பட்டை சத்தம் களை கட்டியது.

    இளைஞர்கள் சிலம்பாட்டம் நடத்தி அந்த கலை இன்னும் உயிரோட்டமாக இருப்பதை வெளிப்படுத்தினார்கள்.

    சில இடங்களில் கூத்துக் கலைகளும் அமர்க்களப்பட்டன. இது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை களைப்பு இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்க செய்ய உற்சாகப்படுத்தியது.

    போர் களைப்பு தெரியாமல் மெரீனாவில் உள்ள அனைவரும் ஆவேசம் பொங்கி உள்ளனர். மற்றொரு பகுதியில் மெல்லிசை பாடகர்கள் மேடை அமைத்து உணர்ச்சிமிகு பாடல்களை பாடினார்கள்.

    அந்த பகுதியில் திரண்டிருந்த இளைஞர்கள் கையில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் படங்களுடன் கொந்தளித்து கோ‌ஷமிட்டு ஆரவாரம் செய்தனர். அறிவைத் திரட்ட கல்லூரிக்கு செல்வது போல் மாணவ, மாணவிகள் வழக்கம் போல புறப்பட்டு தங்கள் இன உரிமையை மீட்க மெரீனா போராட்ட களத்துக்கு அடங்காத அலை, அலையாக வந்தனர்.

    பறக்கும் ரெயில்கள், சுமக்க முடியாத அளவுக்கு கூட்டங்களை சுமந்து சேப்பாக்கம் ரெயில் நிலையம் வந்தன. அங்கிருந்து மக்கள் மெரீனா கடற்கரைக்கு சாரை, சாரையாக சென்றனர்.

    திருவான்மியூர், அடையார் வழியாக ஏராளமான பொது மக்கள் தங்கள் வாகனங்களில் வந்து குவிந்தனர். அதுபோல சிந்தாதிரிப்பேட்டை, அண்ணா சாலை, காமராஜர் சாலை வழியாகவும் பொதுமக்கள் வந்து கொண்டே இருந்தனர்.

    மொத்த தமிழகத்தையும் கட்டிப் போட்டிருக்கும் போராட்ட களத்தை நேரில் காண பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து குவிந்தனர். மாணவர்களின் இனப்பற்றை பார்த்த அவர்கள், தங்கள் பாரம்பரியத்தை மீட்க உணர்ச்சிப் பிழம்பாக மாறிப் போனார்கள்.

    அது மட்டுமின்றி தண்ணீர் பாக்கெட்டுகள், பழ வகைகள், உணவு வகைகள், பிஸ்கட் பாக்கெட்டுகள், காபி, டீ போன்றவற்றை எடுத்து வந்து கொடுத்தனர். உண்மையிலேயே இந்த வி‌ஷயத்தில் தமிழன் குணம் தனித்துவம் கொண்டது என்பதை இல்லத்தரசிகள் இன்று நிரூபித்து காட்டினார்கள்.

    உணவு பொருட்கள், தண்ணீர் எங்கிருந்து வருகிறது, கொடுத்தது யார்? என்ற கேள்விக்கு “இது எங்கள் இன உணர்வுக்கு கிடைத்த சிறு காணிக்கைதான்” என்று அமைதியாக மாணவர்கள் சொல்கிறார்கள்.

    அந்த உணவை கொடுப்பவர்களும் எங்களுக்கு பெயரும் வேண்டாம், புகழும் வேண்டாம் போர்க் களத்தில் உள்ள என் தமிழ் சொந்தத்துக்கு கடமை உணர்வுடன் கொடுக்கிறேன் என்று கூறி நகர்ந்தனர்.

    போராட்ட களத்தை கண்காணிப்பதையும் ஒழுங்கு படுத்துவதையும் இளைஞர்களும் மாணவர்களுமே பார்த்துக் கொள்கிறார்கள்.

    குவியும் குப்பைகளை அவர்களே அள்ளி லாரிகளில் ஏற்றுகிறார்கள். பெண் போராட்டக்காரர்களை அன்போடும், கனிவோடும் பார்த்து கொள்கிறார்கள்.

    இன்று மதியம் 12 மணிக்கு போராட்ட களத்தில் இருந்த ஒரு மாணவி மயங்கி விழுந்தார். அவரை ஒரு இளைஞர் தன் கையால் தூக்கி முதல் உதவி கொடுக்க தூக்கி சென்றார். அந்த இடத்தில் சகோதர பாசம் உச்சத்தில் இருந்தது.

    விவேகானந்தர் இல்லம் பகுதியில் திடீரென வந்த ஒரு மாடு இரு சக்கர வாகனத்தில் வந்த இளம்பெண்ணை மோதி தள்ளியது. கீழே விழுந்த அந்த பெண்ணை, இளைஞர்கள் தூக்கி விட்டு உதவி செய்தனர்.

    கி.ஆ.பெ.விசுவநாதத்தின் மகள், மாணவர்கள் மத்தியில் பேசும்போது, “என் தந்தை இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். அது போன்ற உணர்ச்சிமிக்க போராட்டங்களில் நான் கலந்து கொண்டேன். இந்த போராட்டம் வெல்லும்” என்றார்.

    கூட்டத்தில் ஒரு வாலிபர் அவ்வப்போது அங்கு ஒலியை எழுப்புகிறார். மகாபாரத போரில் கண்ணனால் ஊதப்பட்ட சங்கொலி பாண்டவர்களுக்கு வெற்றி சத்தமாக அமைந்தது. எதிரிகளுக்கு பீதியை உருவாக்கியது.

    அதுபோலதான் அந்த இளைஞன் ஊதும் சங்கொலி சத்தமும் அமைந்துள்ளது.

    மகாபாரத போர் நடந்தது 18 நாட்கள் இந்த போர் எத்தனை நாளோ...?

    Next Story
    ×