search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்று 4-வது நாளாக போராட்டம்: மெரீனாவில் அலை, அலையாக திரண்டு வந்த மக்கள்
    X

    இன்று 4-வது நாளாக போராட்டம்: மெரீனாவில் அலை, அலையாக திரண்டு வந்த மக்கள்

    சென்னை மெரீனாவில் இன்று 4-வது நாளாக மிக, மிக எழுச்சியுடன் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடந்தது. கடந்த மூன்று நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று மெரீனாவில் திரண்டவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது.
    சென்னை:

    ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி கடந்த 17-ந்தேதி சுமார் 2 ஆயிரம் இளைஞர்கள் சென்னை மெரீனா கடற்கரையில் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.

    அவர்களது போராட்டம் பற்றி வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது. இதனால் இளைஞர்களின் போராட்டம் புதிய எழுச்சியைப் பெற்றது.

    மறுநாள் 18-ந்தேதி இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து கல்லூரி மாணவ-மாணவிகளும், ஐ.டி. நிறுவனங்களில் பணி புரிபவர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது. தன்னெழுச்சியாக கிளர்ந்து எழுந்த இந்த போராட்டம் நேற்று மக்கள் போராட்டமாக மாறியது.

    பொதுமக்கள், அரசு ஊழியர்கள், வக்கீல்கள் என்று அனைத்து தரப்பினரும் அலை, அலையாக வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் மூலம் அரசியல் கலப்பு இல்லாமல் முதன் முதலாக தமிழர்கள், தங்கள் பிரச்சனைக்காக சொந்தமாக தாமாகவே போராட்டம் நடத்திய சாதனையை படைத்தனர். இந்த போராட்டம் உலகம் முழுவதும் பேசப்படும் தனித்துவம் கொண்ட ஒரு போராட்டமாக மாறி உள்ளது.

    மக்கள் எழுச்சியாக மாறியுள்ள இந்த போராட்டத்தை கைவிட செய்ய அரசு அதிகாரிகளும், போலீசாரும் முயன்றனர். ஆனால் போராட்டத்தை கைவிட மாணவர்கள், பெற்றோர்கள் மறுத்தனர். இந்த போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் இன்று தமிழ்நாடு முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.

    அதே சமயத்தில் மெரீனாவில் இன்று 4-வது நாளாக மிக, மிக எழுச்சியுடன் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடந்தது. கடந்த மூன்று நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று மெரீனாவில் திரண்டவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது.

    கடந்த 3 நாட்களாக மதியத்துக்கு பிறகே போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் 4-வது நாளாக இன்று காலை முதலே போராட்ட மக்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. நேரம் செல்ல செல்ல மக்களும், மாணவர்களும் அலை, அலையாக வந்தபடி இருந்தனர்.

    இன்று பொதுமக்கள் வருகை அதிகமாக இருந்தது. நிறைய பெற்றோர் தங்களுடன் தங்களது மகன்கள், மகள்களையும் அழைத்து வந்திருந்தனர். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நிறைய மாணவர்கள் இன்றைய போராட்டத்துக்கு வந்திருந்தனர்.

    அவர்கள் மெரீனா கடற்கரையில் 2 இடங்களில் அமர்ந்தனர். விவேகானந்தர் இல்லம் எதிரே ஒரு இடத்திலும் குடிசை மாற்று வாரியம் அலுவலகம் எதிரே ஒரு இடத்திலும் அமர்ந்தனர்.

    சென்னை புறநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கார்களில் சிறுவர், சிறுமிகளை அழைத்து வந்திருந்தனர். பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகைகளை எடுத்து வந்திருந்தனர்.

    அந்த பாதகைகளை பிடித்தபடி அவர்கள் போராட்டக்காரர்களுடன் அமர்ந்தனர். இதனால் இன்று மாணவர்கள், இளைஞர்கள் பெற்றோர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.

    மதியம் 12 மணி அளவில் மெரீனாவில் திரும்பிய திசையெல்லாம் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது.

    தமிழக வரலாற்றில் இதுவரை மெரீனாவில் மக்கள் இப்படி திரண்டதே கிடையாது. அரசியல் கட்சிகள் கூட்டங்களிலும், பண்டிகை நாட்களிலும் சுமார் 1 லட்சம் பேர்தான் திரள்வது வழக்கம்.

    ஆனால் தமிழர்கள் தங்கள் பாரம்பரியத்தை மீட்டு எடுப்பதற்காக தாங்களாகவே ஆர்வத்துடனும், ஆவேசத்துடனும் வந்ததால் பொது மக்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டது.

    இதுபற்றி போலீஸ் இலாகாவைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், மதியம் வரை மெரீனாவில் சுமார் 2 லட்சம் பேர் திரண்டு உள்ளனர். இன்று மாலை இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும்” என்றார்.

    தமிழர்களின் அடையாளத்தை மீட்டெடுக்க திரண்ட மக்கள் வெள்ளம் போலீசாரிடம் இன்று அளவு கடந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எப்படி இவர்கள் தங்கள் பாரம்பரியத்துக்காக திடீரென உணர்ச்சி பெருக்குடன் வருகிறார்கள் என்று வியந்தனர்.

    தன்னெழுச்சியாக உருவாகி உள்ள இந்த போராட்டம் உலக தமிழர்களை உணர்வுபூர்வமாக ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதாக அமைந்துள்ளது.

    தமிழக வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயத்திற்கான தொடக்கமாக அமைந்திருப்பதாக அனைத்து துறையினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    அதை உறுதிப்படுத்தும் வகையில் மாணவர்கள், இளைஞர்களுடன் லட்சக்கணக்கான பொதுமக்களும் கைகோர்த்துள்ளனர். அரசியல் வாடையோ, சினிமா மாயையோ இல்லாமல் இந்த புரட்சி மெரீனா கடற்கரையில் அரங்கேறி உள்ளது.

    இன்று 4-வது நாளாக திரண்ட சுமார் 2 லட்சம் பேரும் எழுப்பிய கோ‌ஷம் விண்ணை தாண்டி செல்வதாக இருந்தது. வட மாநில பிரபலங்கள் அனைவரும் தமிழர்களின் இந்த போராட்டத்தை மிகவும் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள்.

    தமிழக மாணவர்களும், இளைஞர்களும் கட்டுக்கோப்பாக இருப்பதை பாராட்டி உள்ளனர். ஆனால் தமிழக உளவுப் பிரிவு போலீசார், இந்த கூட்டம் எங்கிருந்து, எப்படி வருகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறியபடி 2 லட்சம் மக்களையும் சுற்றி சுற்றி வந்த வண்ணம் உள்ளனர்.
    Next Story
    ×