search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு போராட்டம் வலுக்கிறது: மெரீனாவில் 3-வது நாளாக ‘தர்ணா’
    X

    ஜல்லிக்கட்டு போராட்டம் வலுக்கிறது: மெரீனாவில் 3-வது நாளாக ‘தர்ணா’

    தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி இளைஞர்கள், மாணவர்கள் நடத்திவரும் போராட்டம் வலுத்து வருகிறது. இன்று மெரீனாவில் 3-வது நாளாக தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
    சென்னை:

    தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக்கூடாது என்று பீட்டா எனும் அமைப்பு சுப்ரீம் கோர்ட்டு மூலம் தடை பெற்றுள்ளது.

    இதனால் கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மத்திய, மாநில அரசுகள் இந்த வி‌ஷயத்தில் எந்த ஒரு உறுதியான நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. இதனால் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள் என்ற குமுறல் தமிழக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய - மாநில அரசுகள் உண்மையிலேயே ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்களை பரப்பி, பகிர்ந்து கொண்டு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்பட பல நகரங்களில் இளைஞர்கள் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

    இதனால் தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக இளைஞர்களிடம் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் மெரீனா கடற்கரையில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு சுமார் 2 ஆயிரம் இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை தொடங்கினார்கள். அதுபற்றி வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் தகவல்கள் பரவியது. இதையடுத்து மெரீனா கடற்கரை நோக்கி இளைஞர்களும், மாணவர்களும் அலை, அலையாக வரத் தொடங்கினார்கள்.

    நேற்று முன்தினம் இரவும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. மெரீனா கடற்கரையிலேயே வெட்ட வெளியில் கடும் குளிரிலும், பனியிலும் படுத்துத் தூங்கிவிட்டு நேற்று 2-வது நாள் போராட்டத்தை தொடங்கினார்கள். நேற்று மெரீனாவில் திரண்ட கூட்டம் மேலும் அதிகரித்தது.

    நேற்று மதியத்துக்குப் பிறகு மெரீனா கடற்கரை போராட்ட களத்துக்கு பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வந்து சேர்ந்தனர். இதனால் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியது. ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்களும், மாணவர்களும் சேர்ந்து எழுப்பிய கோ‌ஷம் மெரீனாவை குலுங்கச் செய்தது.

    இளைஞர்களின் கொந்தளிப்பை தணித்து, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு உயர் அதிகாரிகளும், போலீஸ் உயர் அதிகாரிகளும் பல வழிகளில் முயற்சி செய்தனர். ஆனால் இளைஞர்கள் எந்த ஒரு சமரசத்துக்கும் இடம் கொடுக்கவில்லை. ஜல்லிக்கட்டுக்கு எந்த வகையிலாவது அனுமதி வேண்டும் என்ற ஒரு வரி கோரிக்கையில் உறுதியாக உள்ளனர்.

    இதையடுத்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இளைஞர்கள், மாணவர்கள் பிரதிநிதியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். தனது வீட்டில் வளர்த்து வரும் 4 காளைகளையும் அவர் காண்பித்தார். என்றாலும் அவரது சமரசத்தையும் இளைஞர்கள் ஏற்கவில்லை.

    இதன் காரணமாக நேற்றிரவும் இளைஞர்கள் தொடர்ந்து 2-வது நாளாக மெரீனா கடற்கரை மணலில் கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் தூங்கி எழுந்தனர். பெரும்பாலான மாணவர்கள் வீடுகளுக்கு சென்று விட்டு காலையில் வருவதாக கூறிச் சென்றனர்.

    அதன்படி இன்று (வியாழக்கிழமை) காலை மீண்டும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் மெரீனா கடற்கரையில் திரண்டனர். அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி கோ‌ஷம் எழுப்பினார்கள். நேரம் செல்ல செல்ல மெரீனா கடற்கரைக்கு வந்த மாணவர்கள், இளைஞர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது.



    கடந்த இரு தினங்களாக இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமே போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இன்று போராட்ட களத்தில் சிறுவர்கள முதல் பெரியவர்கள் வரை அனைத்துப் பிரிவைச் சேர்ந்தவர்களும் ஆர்வத்துடன் வந்திருந்தனர். இதனால் மெரீனா கடற்கரை போராட்ட களம் இன்று வித்தியாசமாக காணப்பட்டது.

    இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று காலை முதல் ஏராளமான பெண்கள் வந்தனர். இல்லத்தரசிகள் நிறைய பேர் வந்து இளைஞர்களுடன் அமர்ந்திருந்தனர். வீட்டு வேலைகள் அனைத்தையும் அப்படி, அப்படியே போட்டு விட்டு போராட்டம் நடத்த வந்து இருப்பதாக அவர்கள் கூறினார்கள்.

    அது போல பள்ளி மாணவ - மாணவிகளும் இன்று மெரீனா கடற்கரை போராட்ட களத்துக்கு வந்திருந்தனர். அரசு ஊழியர்கள், வக்கீல்கள், வியாபாரிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் என்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்தனர். சில மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஒன்று திரண்டு வந்திருந்தனர்.

    இருங்காட்டுக்கோட்டையில் ஹுண்டாய் கார் தயாரிப்பு தொழிற்சாலையில் இரவு நேர பணியில் இருந்த சுமார் 60 ஊழியர்கள இரவு பணியை முடித்து விட்டு ஒரு பஸ்சில் மெரீனா கடற்கரைக்கு வந்திருந்தனர். அவர்கள் மாணவர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதுபோல சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் இரவு நேர பணியை முடித்து விட்டு அப்படியே போராட்டத்தில் கலந்து கொள்ள வந்து விட்டனர். இதனால் நேற்றை விட இன்று காலை அதிக கூட்டம் காணப்பட்டது.

    இன்று பகல் 11 மணிக்கு பிறகு மெரீனாவுக்கு வந்த இளைஞர்கள், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

    பிரதமருடன் முதல்-அமைச்சர் பேசிய பிறகு, அதில் வரும் தீர்வை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க இளைஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    எனவே இளைஞர்கள் நடத்தும் போரட்டத்துக்கு இன்று தீர்வு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×