search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டம் வெடித்தது எப்படி?: பரபரப்பு தகவல்கள்
    X

    தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டம் வெடித்தது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

    தமிழர்கள் வரலாற்றில் இன்றைய இளைஞர்கள் போராட்டம் மிக முக்கியமானது. சரியான காலக்கட்டத்தில் இளைஞர்கள் கொந்தளித்து பொங்கி எழுந்துள்ளனர்.
    சென்னை:

    தமிழ்நாடு இதுவரை இப்படி ஒரு உணர்வுப்பூர்வமான போராட்டத்தை கண்டது இல்லை.

    காளை இனம், தமிழகம் முழுவதும் உள்ள காளையர்களை ஒன்றிணைத்துள்ளது.

    தமிழர் வரலாற்றை சற்றுப் புரட்டி பார்த்தால் எத்தனையோ போராட்டங்களை தமிழர்களும், ஈழத் தமிழர்களும் சந்தித்துள்ளனர். குறிப்பாக இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்காக நடந்த போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், தனி ஈழத்துக்கு ஆதரவு தெரிவித்த போராட்டம், நதி நீர் பிரச்சனைகளுக்கான போராட்டம் ஆகியவை முக்கியமானவை.

    ஆனால் இந்த போராட்டங்களை எல்லாம் அரசியல் கட்சி தலைவர்கள்தான் முன்னின்று நடத்தினார்கள். அதற்கு தமிழர்கள் அனைவரும் சூழ்நிலைக்கு ஏற்ப ஆதரவைத் தெரிவித்தனர்.

    அரசியல் புகுந்த காரணத்தால் இந்த போராட்டங்கள் அனைத்தும், அதன் இலக்குகளை 100 சதவீதம் எட்டவில்லை. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்த போராட்டங்கள் ஆகட்டும், நதி நீருக்காக நடந்த போராட்டங்கள் ஆகட்டும் அவை முழுமைப் பெறவில்லை.

    இது இன்றைய நவீனயுக தமிழக இளைஞனிடம் ஒரு வித விரக்தியை ஏற்படுத்தி இருந்தது. தமிழக அரசியல் தலைவர்களும், சினிமா நடிகர்களும் சமூக அக்கறையுடன் உணர்ச்சி பொங்கப் பேசுவதெல்லாம் வெறும் வார்த்தைகள், அவை நடைமுறை வாழ்க்கைக்கு ஒரு போதும் நிச்சயம் உதவாது என்பதை தமிழக இளைய சமுதாயம் உணரத் தொடங்கி விட்டது.

    அரசியல்வாதிகள், நடிகர்கள் மீதான ஒருவித மோகத்தில் இருந்தும், மயக்கத்தில் இருந்தும் தமிழக இளைஞர்கள் விடுபட தொடங்கியுள்ளனர். அந்த மனக்குமுறல், மன ஓட்டம் இளைஞர்கள் மத்தியில் இத்தனை நாட்களாக நீருபூத்த நெருப்பாக இருந்தது.

    தமிழக இளைஞர்களின் மனதில் உள்ள நியாயமான ஏக்கங்கள் சுனாமி போல பதுங்கி இருந்தது. தமிழனை இலங்கை ராணுவம் அடிக்கிறது, கர்நாடகா வஞ்சிக்கிறது, வட மாநில தலைவர்கள் பாராமுகத்துடன் இருக்கிறார்கள் என்ற ஆதங்க கோபம் நீண்ட நாட்களாக இருந்தது.

    எத்தனை நாட்களுக்குத் தான் தமிழர்கள் குட்ட, குட்ட குனிவார்கள்?

    ஜல்லிக்கட்டு வி‌ஷயத்தில் அரசியல்வாதிகளும், சுப்ரீம் கோர்ட்டும் நடந்து கொண்ட விதம் தமிழக இளைஞனிடம் நியாயமான கோபத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே சுனாமி போல அவர்கள் மனதில் ஆதங்கங்களின் குவியல் இருந்தது.

    அவைதான் இன்று இளைஞர்களையும், மாணவர்களையும் ஒன்று சேர்த்து சுனாமி பேரலைகளாக வெளியில் வந்து திடீர் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தமிழக மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது எழுச்சி போராட்டமாகும். எந்த ஒரு தனி மனிதனும் முன்னிலைப்படுத்தப்படாமல் ஒட்டு மொத்தமாக இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை, கொந்தளிப்பு போல காட்டி உள்ளனர்.

    எப்படி இது சாத்தியமாயிற்று? தமிழக இளைஞர்கள், மாணவர்கள் எப்படி ஒட்டு மொத்தமாக வெடித்து கிளம்பினார்கள்?

    இதற்கு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட தகவல்கள்தான் காரணம் என்று ஒரு வரியில் சொல்லி விடுகிறார்கள். அது மட்டுமே காரணம் அல்ல. தமிழக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் கடந்த பல ஆண்டுகளாக இருந்த வெறுப்பும், விரக்தியுமே முக்கிய காரணமாகும்.

    வாய் ஜாலம் பேசும் அரசியல்வாதிகள், தினமும் அறிக்கை விடும் அரசியல்வாதிகள், கடிதம் எழுதும் அரசியல்வாதிகள் ஆகியோரை இனியும் நம்பி பிரயோஜனம் இல்லை என்பதை யதார்த்தமாக உணர்ந்து கொண்ட மறுநாளே தமிழக இளைஞர்கள் தங்கள் கலாச்சாரத்தை பாதுகாக்க, தாங்களே தாமாக போராட்ட களத்துக்கு வந்து விட்டனர்.

    அந்த உணர்வுக்கு சமூக வலைத்தளங்கள் மிக அருமையான அடித்தளம் அமைத்து கொடுத்து விட்டன. தமிழக இளைஞன், தங்கள் இனத்துக்கும், கலாச்சாரத்துக்கும் ஆபத்து வந்தால் முதல் ஆளாக முன் நிற்பான் என்பதை கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் வந்த போது உதவிகள் செய்ய ஓடி வந்து களம் இறங்கி உலகுக்கே நிரூபித்துக் காட்டினான்.



    கரை புரண்டோடிய வெள்ளத்தை எதிர்த்து நின்ற இளைஞர்கள் லட்சக்கணக்கானவர்களை காப்பாற்றி, உணவு கொடுத்து தன்னம்பிக்கையை ஏற்படுத்தினார்கள். அரசியல்வாதிகள் செய்ய முடியாத களப்பணியை 2015-ல் தமிழக இளைஞர் பட்டாளம் செய்து காட்டியது. சமூக வலைத்தளங்கள் அந்த இளைஞர்களை உற்சாகப்படுத்தி ஒன்றிணைத்து உதவியது.

    அதே சமூக வலைத்தளங்கள்தான் இன்று தமிழக கலாச்சாரத்தை மீட்டெடுக்க தமிழக இளைஞர் பட்டாளத்தை தட்டி எழுப்பி கொந்தளிக்க வைத்துள்ளது. அதுவும் தமிழ்நாடு முழுவதும் இந்த கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

    “தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு, அமிழ்தம் அவனுடைய மொழியாகும், அன்பே அவனுடைய வழியாகும்” என்ற நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை கூறியதை இன்றைய தமிழக இளைய சமுதாயம் உலகுக்கு ஓங்கியக் குரலில் நிரூபித்துக் காட்டியுள்ளது.

    சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி என தமிழ்நாட்டில் திரும்பிய திசையெல்லாம் இளைஞர்கள் தங்கள் கலாச்சார உரிமையை மீட்டெடுக்க இரவு-பகல் பாராமல் ஒன்று திரண்டு களத்தில் உள்ளனர்.

    நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழர்களின் வீர விளையாட்டுக்கு அங்கீகாரமும் அனுமதியும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இளைஞர்கள் இருந்தனர். ஆனால் வழக்கம் போல அரசியல்வாதிகள் சட்டத்தை காரணம் காட்டி நழுவினார்கள்.

    இதனால் ஏற்பட்ட குமுறல் முதலில் ஒரு சிறு தீப்பொறியாக “பேஸ்புக்“ இணையத்தளத்தில் வெளியானது. அந்த தீப்பொறி மெல்ல மெல்ல பேஸ்புக்கில் பரவி நிறைய இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தது.

    இதையடுத்து பேஸ்புக்கில் அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு தொடர்பான பல குழுக்கள் உருவானது. கடல் கடந்து வாழும் தமிழ் இளைஞர்களும் பேஸ்புக்கில் பல பக்கங்களை உருவாக்கி மற்ற இளைஞர்கள் மனதில் தமிழ் கலாச்சாரம் சாய்க்கப்பட்டு விடக்கூடாது என்ற தீயை மனதில் எரிய வைத்தனர்.

    “ஐ சப்போர்ட் ஜல்லிக்கட்டு”, “விவாண்ட் ஜல்லிக்கட்டு”, “எலட் அஸ் பி யுனைடெட்”, “ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு”, “ஷேவ் அவர் ஜல்லிக்கட்டு கல்ச்சர்” இப்படி ஏராளமான குழுக்கள், பக்கங்கள் உருவாயின. டுவிட்டர் இணையத்தளத்திலும் ஜல்லிக்கட்டுக்காக ஏராளமானவர்கள் புதிய பக்கங்களைத் தொடங்கினார்கள்.

    இந்த சமூக வலைத்தள பக்கங்கள் லட்சக்கணக்கான லைக்குகளை பெற்றன. கருத்து பரிமாற்றங்கள் நடந்தன.

    இதன் தொடர்ச்சியாக “வாட்ஸ் அப்” குழுக்கள் மூலமாகவும் ஜல்லிக்கடடு தொடர்பான அடிமனசு ஆழ் உணர்வு தட்டி எழுப்பப்பட்டது. சமூக வலைத் தளங்களில் பெருகிய ஆதரவும், வரவேற்பும் இளைஞர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது.

    இதைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக என்ன செய்வது என்று சமூக வலைத்தளங்கள் மூலம் ஆலோசனை நடத்திய இளைஞர்கள் “ஒன்று திரண்டு போராடலாம்” என்ற முடிவுக்கு வந்தனர். அந்த முடிவும் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரப்பட்டு, பரப்பப்பட்டது.

    அதன் விளைவுதான் தமிழக இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு. இது தனிப்பட்ட யாரும் கூட்டிய கூட்டம் அல்ல. தானாக கூடிய வீரத்தமிழர்களின் கூட்டம்.

    காசுக்காக கூட்டப்பட்ட கூட்டமல்ல. கலாச்சாரத்தை மீட்டெடுக்க தமிழ் இளைஞர்கள் வீறுநடை போட்டுள்ள கூட்டம்.

    இது தமிழ்நாட்டில் உருவாகியுள்ள புதிய எழுச்சி. தமிழர்களின் வீர வரலாற்றில் இந்த எழுச்சி தனித்துவத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நவீன அறிவியல் மாற்றம், உயர் படிப்பு, வெளிநாட்டு மோகம், பண ஆசை போன்ற காரணங்களால் தமிழன் தன் தனி அடையாளத்தை இழந்து விட்டான் என்ற எண்ணமும், ஏக்கமும் கடந்த சில ஆண்டுகளாக பொதுவாக பேசப்பட்டு வந்தது.

    ஆனால் ஜல்லிக்கட்டை வென்றெடுக்க திரண்டுள்ள இளைஞர்கள் பட்டாளம், இல்லை.... இளைஞர்கள் தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மறக்கவில்லை. அது எங்கள் உயிரோடு கலந்த உணர்வு என்பதை இன்றைய போராட்டம் வாயிலாக உணர்த்தி உள்ளனர்.

    தமிழ் கலாச்சாரத்துக்கு எந்த ஒரு ஆபத்து வந்தாலும் இனி தமிழ்நாட்டு இளைஞன் பொறுத்துக் கொண்டோ, சகித்துக் கொண்டோ போக மாட்டான் என்ற யதார்த்தம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.

    தமிழர்கள் வரலாற்றில் இன்றைய இளைஞர்கள் போராட்டம் மிக முக்கியமானது. சரியான காலக்கட்டத்தில் இளைஞர்கள் கொந்தளித்து பொங்கி எழுந்துள்ளனர்.

    இந்த போராட்டத்தின் வடிவமும், முடிவும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் உண்மையாக வெளிப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டு இளைஞர்கள் சவுக்கை கையில் எடுத்து இருக்கிறார்கள். இனி தமிழர்களின் உணர்வுகளை தூண்டி விட்டு கலாச்சாரத்தை காக்காமல், வெறுமனே அதில் குளிர்காய நினைத்தால்.... இளைஞர்கள், மாணவர்களின் சவுக்கடியில் இருந்து யாரும் தப்ப முடியாது.
    Next Story
    ×