search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீட்டாவின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்த சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம்: சசிகலா அறிக்கை
    X

    பீட்டாவின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்த சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம்: சசிகலா அறிக்கை

    பீட்டா அமைப்பின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு சட்டரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நாளை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அப்போது, ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளார்.

    இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுக்க இன்று போராடி வரும் தமிழக மக்களின் கொதிநிலை கொண்ட அதே மனநிலையில் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் சரி, தமிழக அரசும் சரி, ஒருமித்த கருத்தையே கொண்டிருக்கிறது.

    உலக அரங்கில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலும் குறிப்பாக, திராவிட அரசியலில் மாபெரும் வரலாற்றுப் புரட்சிகளுக்கெல்லாம் வாய்க்கால் வகுத்த பெருமை மாணவச் செல்வங்களின் எழுச்சிக்கும், புரட்சிக்கும் உண்டு.  அதே வேளையில், தன்னெழுச்சியாக உருவாகி இருக்கும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாகவோ, குந்தகத்தை ஏற்படுத்தும் வகையிலோ அமைந்துவிடக் கூடாது என்ற பொறுப்புணர்வோடு தங்களின் ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் அமைதி வழியில், அகிம்சா நெறியில் முன்னெடுத்து வரும் மாணவச் செல்வங்களும், இளைஞர்களும் உலகத்துக்கே வழிகாட்டும் உயரியவர்களாகத் திகழ்வதை பாராட்டித் தான் ஆக வேண்டும்.  

    அதே வேளையில், மாணவச் செல்வங்களின் கல்வி, இளைஞர்களின் வேலை வாய்ப்பு, ஏழை, எளிய குடும்பங்களின் பொருளாதார பின்புலம் இவற்றில் எத்தகைய இடர்களும், இடையூறுகளும் இப்போராட்டங்களால் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழக அரசும், மத்திய அரசிடம் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குவதற்கு மிக உறுதியான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.  

    இதன் உச்சகட்டமாக, தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் மாணவச் செல்வங்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோரது எழுச்சிமிக்க புரட்சிகளை எடுத்துரைத்து, தமிழகத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்பினை விளக்கி, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க விரைந்து அவசர சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான அவசியத்தையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு இந்திய குடியரசுத் தலைவரையும், பாரதப் பிரதமரையும் நேரில் சந்தித்து வலியுறுத்த இருக்கிறது.
        
    இவையாவிற்கும் மேலாக, மாணவச் செல்வங்கள், இளைஞர்கள் உள்ளிட்ட தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வரவிருக்கும் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடரில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை முற்றிலுமாக நீக்கிடக் கோரும் தீர்மானத்தை முன்மொழியவும், அதனை அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த குரலால் நிறைவேற்றவும் வலியுறுத்துவோம் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், அந்நிய நாட்டில் உருவான அமைப்பாகிய `பீட்டா' தமிழ் நாட்டின் கலாச்சார பெருமைகளுக்கு குந்தகம் விளைவிக்கின்ற செயல்களில் ஈடுபடுவதை முற்றிலும் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை சட்ட ரீதியாக மேற்கொள்வோம்.

    ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க ஓர் சட்டத் திருத்ததை முன்மொழிய வேண்டும் என்ற வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம் மத்திய பா.ஜ.க. அரசு தகுந்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×