search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை அருகே துப்பாக்கி சூடு நடந்த கிராமத்தில் தொடர்ந்து பதட்டம்: 800 பேர் மீது வழக்கு
    X

    புதுவை அருகே துப்பாக்கி சூடு நடந்த கிராமத்தில் தொடர்ந்து பதட்டம்: 800 பேர் மீது வழக்கு

    புதுவை அருகே துப்பாக்கி சூடு நடந்த கிராமத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவு வருகிறது. மேலும் இது தொடர்பாக 800 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த பாகூர் அருகே குருவிநத்தம் கிராமம் உள்ளது.

    மாட்டு பொங்கல் அன்று குருவிநத்தத்தை சேர்ந்த 2 பேர் மோட்டார் சைக்கிளில் அங்குள்ள பெரியார் நகர் பேட் பகுதிக்கு சென்றனர். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிளில் மிக வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து பெரியார் நகரை சேர்ந்த வாலிபர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதில் அவர்களுக்கு வாய் தகராறு ஏற்பட்டு கை கலப்பாக மாறி உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பெரியார் நகர் பேட் வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை தாக்கியதாக தெரிகிறது.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். அதோடு அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

    இந்த நிலையில் நேற்றைய தினம் குருவிநத்தம் பகுதியை சேர்ந்த 2 பேர் பெரியார்நகர் பேட் மாரியம்மன் கோவில் தெருவில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியில் நின்ற வாலிபர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி இந்த பகுதி வழியாக செல்ல கூடாது என கூறியுள்ளனர்.

    இதில், ஆத்திரம் அடைந்த அவர்கள் தங்கள் கிராமத்துக்கு சென்று தங்களை தாக்கியதாக தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த குருவிநத்தம் கிராம மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இரும்பு கம்பி, தடி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒன்று கூடினர்.

    பின்னர் அங்கிருந்து பெரியார்நகர் பேட் பகுதிக்கு சென்றனர். இதனை பார்த்த பெரியார் நகர் பேட் பகுதி மக்களும் ஆயுதங்களுடன் வந்தனர். இதனால் அங்கு பெரும் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், அவர்கள் சமாதானம் அடையாமல் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கினர். இதில், 5 மோட்டார் சைக்கிள், மாரியம்மன் கோவில் மேற்கூரை பகுதியும் சேதம் அடைந்தது. மேலும் 5 வீடுகளும் சூறையாடப்பட்டன.

    இதனை அடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த பாகூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜய குமார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் 9 ரவுண்டுகள் சுட்டார். அப்போது கலவரக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மண்டை உடைந்தது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் கலவரக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கிருந்து கலவரக்காரர்கள் சிதறி ஓடினர். இதில், 2 தரப் பினருக்கும் காயம் ஏற்பட்டது.

    தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய கோரி பெரியார் நகர்பேட் பகுதியை சேர்ந்த மக்கள் மாரியம்மன் கோவில் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் அந்த பகுதியில் இன்னும் பதட்டம் நீடிக் கிறது. இதனால் அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கலவரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீதும் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குருவிநத்தத்தை சேர்ந்த விஜய்குமார் உள்ளிட்ட 500 பேர் மீதும், பெரியார் நகரை சேர்ந்த பார்த்திபன் உள்ளிட்ட 300 பேர் மீதும் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து கிராமத்தை சேர்ந்த பெரும்பாலானோர் வெளியேறி விட்டனர். வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×