search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாய்ப்புற்று -மூளைக்கட்டியால் அவதிப்படுகிறேன்: சேகர்ரெட்டியின் கூட்டாளி லோதா கோர்ட்டில் தகவல்
    X

    வாய்ப்புற்று -மூளைக்கட்டியால் அவதிப்படுகிறேன்: சேகர்ரெட்டியின் கூட்டாளி லோதா கோர்ட்டில் தகவல்

    வாய்ப்புற்று நோய் மற்றும் மூளைக்கட்டியால் அவதிப்பட்டு வருவதாக சேகர்ரெட்டியின் கூட்டாளி லோதா கோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர், கருப்பு பணத்தை ஒழிக்கவும், பதுக்கி வைக்கப்பட்டுள்ள புதிய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்வதற்கும் மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டது.

    சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சேகர்ரெட்டியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரது வீட்டில் ரூ.24 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் இருந்தன.

    இதனை தொடர்ந்து சேகர்ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளான சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், ராமச்சந்திரன், கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் பரஸ்மால் லோதா ஆகியோரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.

    இதன்பின்னர், ரூ.8 கோடி மதிப்புள்ள புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை பதுக்கிவைத்ததாக, இந்த 6 பேர் மீது மற்றொரு வழக்கையும் சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்தனர்.

    இந்த 2-வது வழக்கில், சேகர்ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள், காவலில் எடுத்து விசாரித்தார்கள். இந்த விசாரணை நேற்று முடிந்து, 3 பேரையும் சி.பி.ஐ. சிறப்பு செசன்சு கோர்ட்டில், சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜர்படுத்தினார்கள். இதையடுத்து, அவர்களை கோர்ட்டு காவலில் சிறையில் அடைக்க நீதிபதி வெங்கடசாமி உத்தர விட்டார்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கொல்கத்தா தொழிலதிபர் பரஸ்மால் லோதாவை, காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட் டில், மத்திய அமலாக்கப் பிரிவு துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை நீதிபதி பஷிர்அகமது விசாரித்தார். அப்போது பரஸ்மால் லோதா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம், விசாரணைக்கு செல்ல விருப்பமா? என்று நீதிபதி கேட்டார். அதற்கு பரஸ்மால் லோதா, ‘எனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறினார்.

    வாய்ப்புற்று நோய் மற்றும் மூளைக்கட்டியால் அவதிப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே டெல்லி மண்டல அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வாக்கு மூலத்தை பெற்று விட்டனர். இப்போது என்னிடம் விசாரணை நடத்த எதுவும் இல்லை. அதனால் விசாரணைக்கு செல்ல விரும்ப வில்லை’ என்று கூறினார்.

    இதையடுத்து அமலாக்கப் பிரிவு சார்பில் ஆஜரான வக்கீல், பரஸ்மால் லோதாவை காவலில் வைத்து விசாரித்தால் தான் பணம் பதுக்கல் விவகாரத்தில் பல உண்மைகள் தெரிய வரும்’ என்று வாதிட்டார். இதையடுத்து, பரஸ்மால் லோதாவை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, பரஸ்மால் லோதாவை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

    Next Story
    ×