search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கிரவாண்டி அருகே விவசாயி படுகொலை: புதுவையை சேர்ந்த 4 பேரை பிடிக்க போலீசார் தீவிரம்
    X

    விக்கிரவாண்டி அருகே விவசாயி படுகொலை: புதுவையை சேர்ந்த 4 பேரை பிடிக்க போலீசார் தீவிரம்

    விக்கிரவாண்டி அருகே விவசாயி கொலை தொடர்பாக புதுவையை சேர்ந்த 4 பேரை பிடிக்க போலீசார் தீவிரம் அடைந்துள்ளனர்.
    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஒளிவண்ணன்(வயது 62). விவசாயி. இவர் கடந்த 6-ந் தேதி மதியம் மோட்டார் சைக்கிளில் முண்டியம்பாக்கம் சுரங்கப்பாதை வழியாக வந்துகொண்டிருந்தார்.

    அப்போது அந்த பகுதியில் பாலத்தின் கீழே மறைந்திருந்த மர்மகும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் ஒளிவண்ணன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் ஒளிவண்ணனின் மனைவி பூங்கொடி புகார் செய்தார். அதில் நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் தனது கணவரை கொலை செய்து விட்டனர் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதையொட்டி கொலையாளிகளை பிடிக்க விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மோகனமுத்து ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் கொலையாளிகளை தேடி வந்தனர்.

    இந்நிலையில் வாக்கூர் ஏரிக்கரையில் சிலர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்றனர். முள்புதருக்குள் பதுங்கியிருந்த 10 பேரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரத்தை சேர்ந்த செம்மல், ரகு, விஜய், மூங்கில்பட்டு பிரசாந்த், வாக்கூர் இளந்தளிர், சுப்பிரமணி, விழுப்புரத்தை சேர்ந்த சண்முகம், ரிச்சர்டு, புதுவையை சேர்ந்த அஜித், சந்திரன் ஆகியோர் என்று தெரியவந்தது. அவர்கள் 10 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட செம்மல் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    என் தந்தை ஆசைத் தம்பிக்கும் அவரது தம்பி ஒளிவண்ணனுக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 2013-ம் ஆண்டு எனது தந்தையை ஒளிவண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.

    இந்த கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக என் சித்தப்பா ஒளிவண்ணனை கொலை செய்ய திட்டமிட்டேன். காரில் வந்து சில நாட்கள் அவரது நடமாட்டத்தை கண்காணித்தேன்.

    சம்பவத்தன்று விக்கிரவாண்டி அருகே மோட்டார் சைக்கிள்களில் வந்து நண்பர்கள் உதவியுடன் ஒளிவண்ணனை வீச்சரிவாளால் வெட்டி கொலை செய்தேன்.

    இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    கைது செய்யப்பட்ட 10 பேரிடமிருந்து கார், மோட்டார் சைக்கிள் மற்றும் வீச்சரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களை விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த கொலையில் புதுவையைச் சேர்ந்த மேலும் 4 பேருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் புதுவை விரைந்துள்ளனர்.
    Next Story
    ×