search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் விடுமுறை ரத்து: மத்திய அரசு ஊழியர்கள் 4 நாட்கள் போராட்டம்
    X

    பொங்கல் விடுமுறை ரத்து: மத்திய அரசு ஊழியர்கள் 4 நாட்கள் போராட்டம்

    ‘பொங்கல் விடுமுறை ரத்து’ அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் 4 நாட்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு திடீரென நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இது தமிழர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    இதனை தொடர்ந்து ‘விடுமுறை ரத்து’ அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் 4 நாட்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

    மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் தமிழ்நாடு பிரிவு பொதுச்செயலாளர் துரைப்பாண்டியன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று மாலை 5 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நாளை (11-ந்தேதி) தபால் நிலையங்களை முற்றுகையிட்டு மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். 13-ந்தேதி போகிப் பண்டிகை அன்று மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தொடர் முழக்க போராட்டம் நடக்கிறது.

    பொங்கல் பண்டிகை அன்று வேலைக்கு செல்லாமல் பணி மறுப்பு போராட்டம் நடத்துகிறார்கள்.

    ஒவ்வொரு மாநிலங்களில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களின் விடுமுறை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.

    இதனை அந்தந்த மாநிலங்களில் உள்ள ஒருங்கிணைப்பு குழு கூடி முடிவு செய்யும். இதன்படி தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு மொத்தம் 17 நாட்கள் விடுமுறையாகும். இதில் 3 நாட்களை பொது விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கி அறிவிக்க இக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. அவர்களே பொங்கல் பண்டிகையை பொதுவிடுமுறை தினத்தில் இருந்து விடுவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    இதற்கான முடிவு கடந்த ஆண்டு நவம்பர் மாதமே எடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 28-ந்தேதி இதற்கான கையெழுத்து போடப்பட்டுள்ளது.

    இது தொடர்பான கடித நகல்கள் மத்திய அரசு அலுவலகங்களுக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த மாதம் (டிசம்பர்) 20-ந்தேதி அன்று இந்த கடிதம் மத்திய அரசு ஊழியர்களின் கைக்கு கிடைத்தது.

    இதனை தொடர்ந்து கடந்த 28-ந்தேதி அன்று தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் மகாசம்மேளனம் சார்பில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    அதில், தமிழகத்தில் பொது விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி உடனடியாக இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் இதற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று தொழிற் சங்க நிர்வாகியான துரைப்பாண்டியன் தெரிவித்தார்.

    இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் கூறும்போது, மத்திய அரசு நினைத்திருந்தால் முன் கூட்டியே நடவடிக்கை எடுத்து பொங்கல் பண்டிகை விடுமுறை ரத்தை தவிர்த்திருக்கலாம் என்று கூறி ஆதங்கப்பட்டனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையும் ரத்து செய்யப்பட்டிருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூகவலை தளங்களிலும் கண்டனங்கள் அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    பொங்கல் விடுமுறை ரத்து செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி., தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தெகலான் பாகவி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    தி.மு.க. சார்பில் நாளை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    எனவே மத்திய அரசு பொங்கல் பண்டிகை விடுமுறை ரத்து அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் வேண்டுகோளாக உள்ளது.
    Next Story
    ×