search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டுறவு துறை ஊழல் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை: நாராயணசாமி
    X

    கூட்டுறவு துறை ஊழல் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை: நாராயணசாமி

    கூட்டுறவு துறை ஊழல் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கூட்டுறவு ஒன்றியம் சார்பில் தேசிய கூட்டுறவு வார விழா கூட்டுறவு ஒன்றிய வளாக கருத்தரங்கு அரங்கத்தில் நடைபெற்றது.

    அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., அரசு செயலாளர் அருண்.தேசாய் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர் சிவக்குமார் வரவேற்றார்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    புதுவை மாநிலத்தை பொறுத்த வரையில் காரைக்கால், புதுவையில் கூட்டுறவு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. ஆனால் மாகி, ஏனாமில் லாபத்தில் உள்ளன. கூட்டுறவு நிர்வாகிகள் தங்கள் கடமைகள், பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். கடந்த ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு அமைப்புகள் மிகுந்த நஷ்டத்தில் இயங்கின. இதற்கு முக்கிய காரணம் தேவைக்கு அதிகமாக முறைகேடான வகையில் ஊழியர்களை நியமித்தது தான்.

    மேலும் அவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கியது, பதவி உயர்வு போன்றவையே காரணமாகும். புதுவை அரசு ஆண்டுதோறும் ரூ.6625 கோடி பட்ஜெட் தாக்கல் செய்கிறது. ஆனால் கூட்டுறவுத்துறைக்கு மட்டும் மானியமாக ரூ.570 கோடி செலவாகிறது. இத்தொகை முழுவதும் நஷ்ட கணக்கிலேயே செலவாகிறது.

    மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் கூட்டுறவு துறை சிறப்பாக உள்ளது. அவற்றின் மூலம் செய்யப்படும் பொருள்கள் தரமாக உள்ளதால் விற்பனை அதிகமாகி லாபம் கிடைக்கிறது.

    புதுவையில் லாபத்தில் இயங்கும் கூட்டுறவு நிறுவனங்களில் கூடுதல் மூல தனம் போடப்பட்டு லாபம் ஈட்டச் செய்யப்படும். நஷ்டத்தில் இயங்கும் கூட்டுறவு நிறுவனங்கள் லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் கூட்டுறவு அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு ஊழியர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுவையில் திட்டமல்லாச் செலவுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ரூ.517 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. இத்தொகை இதர மாநிலங்களுக்கு ஆண்டு தோறும் உயர்த்தப்படுகிறது. புதுவைக்கு மட்டும் உயர்த்தப்படவில்லை. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சரையும் சந்தித்து பேசி உள்ளேன். வரும் 20-ந் தேதி மீண்டும் டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    புதுவைக்கான திட்டமில்லாச் செலவு ஆண்டுக்கு ரூ.1200 கோடியாக இருந்தது. தற்போது ரூ.2400 கோடியாக உயர்ந்து விட்டது. புதுவையில் அனைத்து துறைகளும் லாபத்தில் இயங்கும் நிலையில் ஒரே ஒரு துறை நஷ்டத்தில் இயங்கினால் அதனால் அரசுக்கு நிதி இழப்பு தான் ஏற்படும். கூட்டுறவுத்துறையில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்யப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    கூட்டுறவுத் துறையில் ஊழல் புரிந்தவர்கள் மீது விசாரணை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் தரப்படும் கடன்களுக்கு வட்டி விகிதம் குறைக்கப்படும். தொழில் முனைவோருக்கு தரப்படும் குறுகிய காலக் கடன் நீண்ட காலக்கடனாக மாற்றப்படும்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    விழாவில் டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் வல்சராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் காட்டேரிக்குப்பம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கி, புதுவை பல்கலைக்கழக ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கம், ஏனாம் கூட்டுறவு பண்டக சாலை, பஜன்கோ மாணவர்கள் கூட்டுறவு பண்டக சாலை, புதுவை பொம்மை உற்பத்தியாளர்கள் தொழிலியல் கூட்டுறவு சங்கம், மாகி தொழில் கூட்டுறவு அச்சகம், லாஸ்பேட்டை நெசவாளர் கூட்டுறவு சங்கம், கொர வள்ளிமேடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், ஸ்ரீ ஜெயமாருதி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், பன்னித்திட்டு மீனவர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளிட்டவற்றுக்கு சிறந்த சேவைக்கான கேடயங்கள் வழங்கப்பட்டது.

    முடிவில் துணைப்பதிவாளர் இரிசப்பன் நன்றி கூறினார்.
    Next Story
    ×