search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதாவின் ரூ.113 கோடி சொத்துக்கள் யாருக்கு?
    X

    ஜெயலலிதாவின் ரூ.113 கோடி சொத்துக்கள் யாருக்கு?

    ஜெயலலிதா பெயரில் உள்ள 113.72 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு சொத்துக்கள் யாருக்கு சொந்தம் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பும் கேள்விக்குறியும் எழுந்துள்ளது.
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரில் மொத்தம் 113.72 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளன.

    இதில் அசையும் சொத்துக்கள் ரூ.41.64 கோடிக்கு இருக்கிறது. அசையா சொத்துக்கள் ரூ.72.09 கோடிக்கு இருக்கிறது.

    ஜெயலலிதாவின் சொத்துக்களில் மிக அதிக மதிப்புடையது சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது “வேதா நிலையம்” பங்களா வீடாகும். இந்த பங்களாவை 1967-ம் ஆண்டு ஜெயலலிதா தன் தாய் சந்தியாவுடன் சேர்ந்து 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினார். அந்த பங்களாவின் மொத்த பரப்பளவு 24 ஆயிரம் சதுர அடியாகும்.

    அதில் 21 ஆயிரத்து 662 சதுரடி அளவில் பங்களா கட்டப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் நிபுணர்கள் தற்போது அந்த வீட்டின் மதிப்பு ரூ. 90 கோடி இருக்கும் என்கிறார்கள். ஆனால் அரசின் வழிகாட்டி மதிப்புப்படி அதன் மதிப்பு ரூ.43.96 கோடியாகும்.

    ஜெயலலிதா கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தபோது அதில் போயஸ் கார்டன் பங்களாவின் மதிப்பை ரூ.43.96 கோடி என்றே குறிப்பிட்டுள்ளார்.

    போயஸ்கார்டன் பங்களா தவிர ஜெயலலிதாவுக்கு சொந்தமாக 4 வணிக வளாகங்கள் உள்ளன. அதில் மூன்று வணிக வளாகங்கள் சென்னையிலும், ஒரு வணிக வளாகம் ஐதராபாத்திலும் உள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.13.3 கோடியாகும்.

    தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ஜெயலலிதா பெயரில் 14.50 ஏக்கரில் பண்ணை நிலம் உள்ளது. இந்த இடத்தை 1968-ம் ஆண்டு ஜெயலலிதா தன் தாயார் சந்தியாவுடன் சேர்ந்து வாங்கினார்.

    1981-ம் ஆண்டு மதுராந்தகம் அருகே செய்யூர் கிராமத்தில் ஜெயலலிதா 3.43 ஏக்கரில் ஒரு இடம் வாங்கினார். இந்த இடங்களின் மதிப்பு ரூ.14.78 கோடியாகும்.

    பல்வேறு வங்கிகளில் ஜெயலலிதா பெயரில் உள்ள கணக்குகளில் ரூ.10.63 கோடி உள்ளது. கை இருப்பாக ரூ.41 ஆயிரம் வைத்திருந்தார்.

    ஜெயலலிதா நிறைய வாகனங்களும் வைத்திருந்தார். 2 டொயோட்டா கார்கள், ஒரு டெம்போ டிராவலர், ஒரு டெம்போ டிராக்ஸ், 2 மகிந்திரா வேன்கள், ஒரு சுவராஜ் மஸ்தா கார், ஒரு அம்பாசிடர், 1980 மாடல் கண்டெசா கார் ஆகியவை அவர் பெயரில் உள்ளன. இந்த வாகனங்களின் மதிப்பு ரூ. 42.25 லட்சமாகும்.

    கொடநாடு எஸ்டேட் பங்களா, ஸ்ரீவிஜயா பப்ளிகே‌ஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ், ராயல்வேலி மற்றும் கிரீன் டீ எஸ்டேட் ஆகிய 5 சொத்துக்களில் ஜெயலலிதா பங்குதாரராக உள்ளார். அந்த வகையில் அந்த 5 நிறுவனங்களில் ஜெயலலிதா சொத்து மதிப்பு ரூ. 27.44 கோடியாக உள்ளது.

    வெள்ளி பொருட்கள் 1250 கிலோ அவர் வைத்திருந்தார். அதன் மதிப்பு ரூ.3.12 கோடி.

    1996-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்திய போது 21.28 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 750 ஜோடி செருப்புகள், 10 ஆயிரம் சேலைகள், 44 ஏ.சி. மெஷின்கள் ஆகியவையும் வருமான வரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளதால் அந்த தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கர்நாடகா மாநில அரசு கஜானாவில் வைக்கப்பட்டுள்ளன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகே அவை என்ன ஆகும் என்பது தெரிய வரும்.

    இந்த நிலையில் ஜெயலலிதா பெயரில் உள்ள 113.72 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு சொத்துக்கள் யாருக்கு சொந்தம் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பும் கேள்விக்குறியும் எழுந்துள்ளது. இந்த சொத்துக்கள் பற்றி ஜெயலலிதா ஏதேனும் உயில் எழுதி வைத்திருந்தால் அது சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும். ஜெயலலிதா உயில் விருப்பத்துக்கு எதிராக யாரும் எதுவும் செய்ய இயலாது.

    ஜெயலலிதா தன் சொத் துக்கள் தொடர்பாக ஏதேனும் உயில் எழுதி வைத்துள்ளாரா? என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை. அவரது வழக்குகள் தொடர்பாக கோர்ட்டுகளில் ஆஜரான வக்கீல்களுக்கும் இதுபற்றிய விவரங்கள் முழுமையாக தெரியவில்லை.

    ஜெயலலிதா உயில் எழுதி வைக்காதபட்சத்தில், அவர் சொத்துக்களுக்கு வாரிசுகள் உரிமை கொண்டாட முடியும். இதுபற்றி தென் இந்திய அறிவுசார் சொத்துரிமை வக்கீல் சங்கத்தலைவர் பெரும்புலவில் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    ஜெயலலிதா உயில் எழுதியிருந்தால், அதில் கூறப்பட்டபடிதான் செய்ய முடியும். இல்லையெனில் சொத்துக்கு வாரிசுகள் உரிமை கொண்டாட முடியும்.

    தாய், தந்தை, மனைவி, குழந்தைகளுக்கு இதில் முதல் உரிமை உள்ளது. உடன் பிறந்த சகோதர-சகோதரிகளுக்கு 2-வது உரிமை உள்ளது.

    இவர்கள் யாரும் இல்லையெனில் சகோதர - சகோதரிகளின் குழந்தைகள் உரிமை கொண்டாட முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த அடிப்படையில் பார்த்தால் ஜெயலலிதா உயில் எதுவும் எழுதாத பட்சத்தில் ஜெயலலிதாவின் சகோதரர் மகன் தீபக், மகள் தீபா உரிமை கொண்டாட சட்டத்தில் இடம் உள்ளது.

    Next Story
    ×