search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எதிர்காலம் எப்படி இருக்கும்?: ஜெயலலிதா மறைவால் அ.தி.மு.க.வில் வெற்றிடம்
    X

    எதிர்காலம் எப்படி இருக்கும்?: ஜெயலலிதா மறைவால் அ.தி.மு.க.வில் வெற்றிடம்

    ஜெயலலிதா இல்லாத தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகவே அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    தமிழக அரசியல் களம் பல்வேறு மாற்றங்களை பல கட்டங்களில் சந்தித்து வந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தை அண்ணாதுரை தகர்த்தெறிந்தார்.

    திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கி தனது பேச்சுக்களாலும், எழுத்துக்களாலும் மக்களை கவர்ந்த அவர் ஆட்சியில் அமர்ந்தார். 1967-ம் ஆண்டு இந்த அதிரடி அரசியல் மாற்றம் ஏற்பட்டது.

    2 ஆண்டுகளில் அண்ணா துரை காலமானதையடுத்து, நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வர் ஆனார். ஆனால் தி.மு.க. ஆட்சியின் அடுத்த முதல்-அமைச்சராக கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார். 1969-ல் இருந்து 1971 வரையிலும், அதன் பின்னர் 5 ஆண்டுகளும் (1976 வரையில்) கருணாநிதியே முதல்வராக நீடித்தார்.

    கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தி.மு.க.வில் இருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். 1972-ல் அ.தி.மு.க.வை தொடங்கினார். 1977-ல் மக்கள் செல்வாக்குடன் ஆட்சியையும் பிடித்தார். அதன்பின்னர் சாகும்வரை 1987-ம் ஆண்டு முடிய தொடர்ச்சியாக அவரே முதல்வராக இருந்தார். யாராலும் அசைக்க முடியாத தலைவராக எம்.ஜி.ஆர். விளங்கினார். அதே நேரத்தில் அவரது மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. ஆட்டம் கண்டது.

    இதன் பின்னர் அ.தி.மு.க 2 அணிகளாக உடைந்தது. ஒரு அணிக்கு ஜானகி தலைமை தாங்கினார். இன்னொரு அணியை ஜெயலலிதா வழி நடத்தினார்.

    சேவல் சின்னத்தில் ஜெயலலிதா அணியும், ஜானகி அணி இரட்டை புறா சின்னத்திலும் களம் கண்டன. அப்போது எம்.ஜி.ஆர். கண்ட இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருந்தது.

    அந்த தேர்தலில் ஜெயலலிதா அணியே செல்வாக்கு மிக்கதாக விளங்கியது. இதனால் பிற்காலத்தில் அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்கும் பொறுப்பு ஜெயலலிதாவை தேடிவந்தது. முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னமும் கட்சிக்கு கிடைத்தது. இதுவே அரசியல் களத்தில் ஜெயலலிதாவின் முதல் வெற்றியாகவும் பார்க்கப்பட்டது.

    எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வால் தொடர்ச்சியாக வெற்றியை ருசிக்க முடியவில்லை. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறியே ஆட்சிக்கு வந்தன. கருணாநிதியும், ஜெயலலிதாவும் மாறிமாறி தமிழகத்தை ஆட்சி செய்து வந்தனர்.

    இந்த வரலாற்றையும் ஜெயலலிதா மாற்றிக் காட்டினார். 2011-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா 2016-ல் (இந்த ஆண்டு) நடந்த தேர்தலிலும் 2-வது முறையாக வெற்றியை ருசித்தார். இது எம்.ஜி.ஆருக்கு இணையான சாதனையாகவே பார்க்கப்பட்டது. ஆனால் வெற்றி பெற்று 7 மாதங்களில் ஜெயலலிதா உயிரிழந்து விடுவார் என்று யாருமே எதிர் பார்க்கவில்லை.

    75 நாட்களாக ஆஸ்பத்திரியில் இருந்த ஜெயலலிதா மீண்டு(ம்) வருவார் என்றே அ.தி.மு.க. வினரும், தமிழக மக்களும் எதிர்பார்த்து காத்துகிடந்தனர். ஆனால் அவரை மரணம் தழுவிக் கொண்டது. எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் அரசியல் களத்தை எதிர் எதிர் திசையில் இருந்தே சந்தித்தனர்.

    எம்.ஜி.ஆருக்கு பின்னர் ஜெயலலிதாவும் அவரைப் போலவே மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக மாறினார். இன்னும் பல ஆண்டுகள் தங்களை வழிநடத்திச் செல்வார் என்று காத்திருந்த அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் திடீர் மறைவால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஜெயலலிதா இல்லாத தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகவே அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஜெயலலிதா மறைவால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பப்போவது யார்? என்கிற கேள்வியும் பலமாகவே எழுந்துள்ளது. இதற்கு காலம்தான் விடை அளிக்க வேண்டும்.

    அதேபோல அ.தி.மு.க.விலும் செல்வாக்கு மிக்க தலைவர்கள் என்று யாரையுமே குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. இதனால் இனி, தங்களை வழிநடத்தப் போவது யார்? என்கிற கேள்வியும் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர், ஜெயலலிதாவை போல அடையாளம் காட்டப்படக்கூடிய தலைவர் அ.தி.மு.க.வில் யாருமே இல்லை என்பது அக்கட்சிக்கு நிச்சயமாக பலவீனமே.

    இதுபோன்ற சூழலில் அ.தி.மு.க.வின் எதிர்காலம் எப்படி இருக்கும்? எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிகாக்கப்பட்ட அ.தி.மு.க., அதே கட்டுக்கோப்புடன் இருக்குமா? என்பதற்கும் காலமே பதில் அளிக்க வேண்டும்.
    Next Story
    ×