search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழைய ரே‌ஷன் கார்டுகளுக்கு உள்தாள் ஜனவரியில் வினியோகம்
    X

    பழைய ரே‌ஷன் கார்டுகளுக்கு உள்தாள் ஜனவரியில் வினியோகம்

    ஆதார் இணைக்கும் பணி தாமதமானதால் ஸ்மார்ட் கார்டு திட்டம் மேலும் சில மாதங்களுக்கு தள்ளிப்போகிறது. எனவே பழைய ரே‌ஷன் கார்டுகளில் உள்தாள் இணைக்கப்படுகிறது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றுடன் ஆதார் எண்ணை பதிவு செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைப்பெற்று வருகின்றன.

    குடும்ப அட்டையில் உள்ளவர்களில் பெயர், விவரங்கள், ஆதார் எண், செல்போன் எண் ஆகியவற்றை ரே‌ஷன் கடையில் உள்ள ‘பாயிண்ட் ஆப் மெஷின்’ என்னும் கருவி மூலம் பதிவு செய்யப்படுகிறது.

    இதுவரையில் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் ஆதார் எண் உள்பட முழு விவரங்களை பதிவு செய்துள்ளனர். இன்னும் ஒரு கோடியே 20 லட்சம் குடும்பங்கள் ஆதார் எண்களை முழுமையாக இணைக்காமல் உள்ளனர்.

    ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை விவரங்கள் முழுமையாக பதிவு செய்யும் பணி முழுமை அடைந்தவுடன் கையடக்க அளவில் உள்ள ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு வழங்க அரசு திட்டமிட்டு இருந்தது.

    ஜனவரி மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்கள் வழங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் இத்திட்டத்தை செயல்படுத்துவதை தள்ளி வைத்தனர்.

    ஆதார் இணைக்கும் பணி தாமதமானதால் ஸ்மார்ட் கார்டு திட்டம் மேலும் சில மாதங்களுக்கு தள்ளிப்போகிறது. இந்த நிலையில் பழைய ரே‌ஷன் கார்டுகளில் உள்ள உள்தாள் இந்த மாதத்துடன் முடிகிறது.

    ஜனவரி மாதம் முதல் பொருட்கள் வழங்குவதற்கு அதில் உள்தாள் இணைக்கப்பட வேண்டும். உள்தாள் அச்சடிக்க உயர் அதிகாரிகளின் அனுமதி இன்னும் ஒரு சில நாட்களில் பெறப்பட்டு இந்த மாத இறுதிக்குள் உள்தாள் அச்சடிக்கப்படும்.

    ஜனவரி மாதம் ரே‌ஷன் கடைகள் மூலம் உள்தாள் வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொருட்கள் வாங்க வரும் போது ஒவ்வொரு குடும்ப அட்டையிலும் உள்தாளை ஒட்டி சீல் வைத்து பொருட்கள் வழங்கப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து சிவில் சப்ளை உயர் அதிகாரி மேலும் கூறியதாவது:-

    குடும்ப அட்டை விவரங்களுடன் ஆதார் எண் இணைக்கும் பணி இன்னும் முழுமையடையவில்லை. இதனால் உள்தாள் மூலம் அடுத்த சில மாதங்களுக்கு பொருட்கள் வினியோகிக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

    தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குடும்ப அட்டையில் உள்ள விவரங்கள் வீடு வீடாக சென்று பெறப்படுகிறது. ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆதார் எண்களையும் பதிவு செய்தவர்கள் வீடுகளுக்கு கணக்கெடுக்க ஊழியர்கள் வரமாட்டார்கள். குடும்பத்தில் யாராவது ஒருவரின் ஆதார் எண் பதிவு செய்யப்படாமல் இருந்தாலும் அவர்கள் விவரங்கள் இணைப்பதற்காக ஊழியர் வீடு வீடாக வருகிறார்கள்.

    ஜனவரி மாதம் உள்தாள் மூலம் ரே‌ஷன் பொருட்கள் வினியோகிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×