search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைதீக முறைப்படி ஜெயலலிதா உடலை எரிக்காதது ஏன்?: புதிய தகவல்கள்
    X

    வைதீக முறைப்படி ஜெயலலிதா உடலை எரிக்காதது ஏன்?: புதிய தகவல்கள்

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடலை வைதீக முறைப்படி எரிக்காதது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
    சென்னை:

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிராமண இனத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

    அவரது மூதாதையர்கள் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

    பொதுவாக பிராமணர்கள் இனத்தில் ஒருவர் மரணம் அடைந்து விட்டால் வைதீக முறைப்படி அனைத்து விதமான சாஸ்திர - சம்பிரதாயங்களை கடைபிடிப்பார்கள். உயிரிழந்த அந்த ஆத்மா மேன்மை பெற ஹோமப் பரிகாரங்களும் செய்வதுண்டு.

    இத்தகைய இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு உடலை எரித்து விடுவார்கள். மரித்த ஆத்மாவால் வேறு எந்த பிரச்சனைகளும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், அந்த ஆத்மா மிக எளிதாக மறுபிறவி எடுப்பதற்காகவும் உடலை எரித்து விடும் சம்பிரதாயத்தை பிராமணர்கள் கடை பிடிக்கிறார்கள்.

    ஆனால் இந்த சம்பிரதாயத்துக்கு மாறாக ஜெயலலிதாவின் உடல் நேற்று எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இது பிராமணர்களிடம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து ஜெயலலிதா உடல் ஏன் தகனம் செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுந்தது. அதற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது.

    ஜெயலலிதா விருப்பத்தின் பேரில்தான் அவர் உடல் எம்.ஜி.ஆர். சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே தனக்கு நெருக்கமானவர்களிடமும், சில உயர் அதிகாரிகளிடமும், “என் வாழ்க்கைக்கு வழி காட்டியாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். எனவே அவர் சமாதி அருகே என்னை புதைக்க வேண்டும்” என்று அடிக்கடி கூறியதுண்டாம்.

    அதன் அடிப்படையில் ஜெயலலிதா விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், அவர் உடல் எம்.ஜி.ஆர். சமாதி அருகே நினைவிடம் ஏற்படுத்தும் வகையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “அண்ணா, எம்.ஜி.ஆர். இருவரும் முதல்-அமைச்சர் பதவியில் இருந்தபோது உயிரிழந்ததால் அடக்கம் செய்யப்பட்டனர். அந்த வரிசையில் ஜெயலலிதா உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

    முன்னதாக எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் ஜெயலலிதா உடலை தகனம் செய்யலாமா என்று அ.தி.மு.க. தலைவர்களும், அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினார்கள். அப்படி தகனம் செய்தால் அது எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் செய்யப்பட்டுள்ள மார்பிள் அலங்காரங்களை நிரந்தரமாக மாசுபடிய செய்து விடும் என்று கூறப்பட்டது. இதனால் எம்.ஜி.ஆர். சமாதி அருகே தகனம் செய்யும் முடிவு கைவிடப்பட்டது.

    இதையடுத்து பெசன்ட் நகர் அல்லது மயிலாப்பூரில் உள்ள மாநகராட்சி எரியூட்டும் தகன மேடைக்கு ஜெயலலிதா உடலை கொண்டு சென்று எரிப்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. அங்கிருந்து அஸ்தியை எடுத்து வந்து நினைவிடம் உருவாக்கலாம் என்று கூறப்பட்டது.

    ஆனால் மாநகராட்சி எரியூட்டும் தகன மேடைகளுக்கு ஜெயலலிதா உடலை எடுத்து செல்வது சாத்தியப்படாது என்பதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக ஜெயலலிதாவுக்கும் தனியாக ஒரு பெரிய நினைவிடத்தை கடற்கரையில் கட்ட முடியாத படி மத்திய அரசின் சட்ட விதிகள் உள்ளன. இதையடுத்தே எம்.ஜி.ஆர். சமாதிக்குள் ஜெயலலிதா இடம் பிடிக்கும் நிலை ஏற்பட்டது.

    ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டதற்கு மற்றொரு முதன்மையான காரணமாக “நினைவிடம்.” ஏற்படுத்த வேண்டும் என்ற கட்சியின் முடிவும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு தற்போதும் கிராமப் பகுதிகளில் உள்ள அ.தி.மு.க.வின் தீவிர விசுவாசிகள் வந்து வணங்கி, வழிபட்டு செல்வதை காணலாம்.

    அத்தகைய சூழலை ஏற்படுத்த ஜெயலலிதாவுக்கும் நினைவிடம் அமைக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. எனவே தான் ஜெயலலிதா உடலை எரிக்காமல் அடக்கம் செய்துள்ளனர்.

    அடக்கம் செய்த காரணத்தால் சாஸ்திர - சம்பிரதாய ரீதியாக ஏதேனும் குறைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான், ஜெயலலிதா உடல் சந்தனப் பேழைக்குள் வைக்கப்பட்டதும் பரிகார சடங்குகளை ஒரு அய்யர் மூலம் செய்ததாக கூறப்படுகிறது. தண்ணீர், பால், பூக்களை ஜெயலலிதா உடலைச் சுற்றி அவரது அண்ணன் மகன் தீபக் ஜெயக்குமார் மூலம் தூவ செய்து இந்த பரிகாரங்கள் நடந்தன.

    முன்னதாக ஜெயலலிதா உடல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டன் இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டதும் வைதீக சடங்குகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே ஜெயலலிதா உடலுக்கு பச்சை நிற சேலை அணிவிக்கப்பட்டது.

    ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த முக்கியமான ஒருவர், ஜெயலலிதா உடல் எரிக்கப்படாததால் வைதீக முறையில் என்னென்ன பரிகாரங்கள் செய்யப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறியதாக தெரிகிறது. அந்த ஆலோசனை அடிப்படையில் அனைத்து பரிகார சடங்குகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

    அதன் பேரிலேயே ரத்த உறவு முறையிலான ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மூலம் சில முக்கிய சடங்குகள் நடத்தப்பட்டன. இது நிச்சயம் ஜெயலலிதா ஆத்மாவை சாந்தப்படுத்தும் என்று ஆன்மீகப் பெரியோர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் காலம், காலமாக ஜெயலலிதா நினைவிடத்தில் ஆத்மார்த்தமாக வழிபட வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில்தான் அ.தி.மு.க. முடிவுபடி ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×