search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சம்பத் காலமானார்
    X

    சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சம்பத் காலமானார்

    சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கே.சம்பத். இவர் உடல் நலக்குறைவினால் இன்று அதிகாலையில் மரணமடைந்தார்.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கே.சம்பத். இவர் உடல் நலக்குறைவினால் இன்று அதிகாலையில் மரணமடைந்தார்.

    இவருக்கு வயது 75. நீதிபதி கே.சம்பத், 1941-ம் ஆண்டு ஜூலை 6-ந்தேதி பிறந்தார். இவர் சட்டப்படிப்பை முடித்து விட்டு, 1966-ம் ஆண்டு வக்கீலாக பதவி ஏற்றுக்கொண்டார். சிவில் வழக்குகளிலும், வங்கி தொடர்பான வழக்குகளிலும் இவர் ஆஜராகி வந்தார்.

    கடந்த 1996-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 2003-ம் ஆண்டு ஜூலை 6-ந்தேதி ஓய்வு பெற்றார்.

    2004-ம் ஆண்டு கும்பகோணம் பள்ளியில் நடந்த தீ விபத்தில் 96 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து விசாரணை நடத்த நீதிபதி கே.சம்பத் தலைமையில் தமிழக அரசு விசாரணை கமி‌ஷன் அமைத்தது. நீதிபதி கே. சம்பத், விபத்து குறித்தும், எதிர் காலத்தில் இதுபோல கொடூர சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை தவிர்க்கவும் பல பரிந்துரைகளை அறிக்கையாக தயார் செய்து அப்போதைய தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தனர்.

    இதன்பின்னர் ராயப்பேட்டை, ஜெகதாம்மாள் காலனியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று அதிகாலையில் மரணமடைந்தார்.

    நீதிபதி கே.சம்பத்துக்கு, ஹேமா சம்பத் என்ற மனைவி உள்ளார். இவர், சென்னை ஐகோர்ட்டில் மூத்த வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
    Next Story
    ×