search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பன்முகத் தன்மை கொண்ட சோ ராமசாமியின் வாழ்க்கை குறிப்பு
    X

    பன்முகத் தன்மை கொண்ட சோ ராமசாமியின் வாழ்க்கை குறிப்பு

    பத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்ட சோ ராமாசாமி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
    மரணம் அடைந்த சோ, பன்முகங்களை கொண்டவர். சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயலலிதா, ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சோ மொத்தம் 89 திரைப்படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் பல்வேறு படங்களில் நகைச்சுவை நாயகனாக ஜொலித்துள்ளார்.

    நாடக நடிகராக இருந்து பின்னர் சினிமாவில் நுழைந்த சோ நடிப்பில் தனிமுத்திரை பதித்தவர். 5 நாடகங்களுக்கு கதை-வசனம் எழுதி உள்ளார். 5 சினிமா படங்களை இயக்கி உள்ளார்.

    பத்திரிகையாளராகவும், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கிய அவர் சிறந்த அரசியல் விமர்சகராகவும் விளங்கினார். பன்முக தன்மையுடன் விளங்கிய சோவின் மரணம், சினிமா, பத்திரிகை, அரசியல் நாடக உலகில் பேரிழப்பாக கருதப்படுகிறது.

    1934-ம் ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி பிறந்த சோ வக்கீல் படிப்பை முடித்துள்ளார். இவரது தந்தை சீனிவாச ஐயர், தாய் ராஜம்மாள்.

    14 திரைப்படங்கள் மற்றும் நாடகங்களுக்கு கதை எழுதி உள்ளார். சிறந்த கதாசிரியராகவும் திகழ்ந்தார். “தேன்மொழியாள் மேடை” எனும் நாடகத்தில் இவர் “சோ” என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அதன் பின்னரே அவரது ராமசாமி என்கிற பெயருக்கு முன்னால் “சோ” என்கிற பெயரும் சேர்ந்து கொண்டது.

    நாளடைவில் அவரது இயற்பெயரான ராமசாமி என்கிற பெயர் மறைந்து போகும் அளவுக்கு ‘சோ’ என்கிற பெயரே நிலைத்து நின்றது.

    1966-ம் ஆண்டு சோவுக்கு திருமணம் நடந்தது. மனைவி பெயர் சவுந்திரா. ஸ்ரீராம் என்ற மகனும், சிந்துமா என்ற மகளும் உள்ளனர். மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த சோ, பி.எஸ்.சி. பட்டப்படிப்பை முடித்து வக்கீலுக்கு படித்தார்.

    1957 முதல் 1962 வரை சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாகவும் பணியாற்றினார். சட்ட ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

    1970-ம் ஆண்டு துக்ளக் வார இதழை தொடங்கிய சோ, அதில் பல்வேறு அரசியல் கட்டுரைகளை எழுதி உள்ளார். நையாண்டித்தனமான அவரது அரசியல் விமர்சனங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

    அரசியல் தலைவர்களை நையாண்டி செய்து துணிச்சலாக விமர்சனம் செய்து வந்தார். தனக்கு சரி என்று பட்டதை எழுத்துக்கள் மூலமாக அவர் வெளிப்படுத்தினார். பத்திரிகை துறை பணியை பாராட்டி சோவுக்கு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

    1980-ம் ஆண்டு ‘வீரகேசரி’ விருதை பெற்ற இவர் “ஹால்டிகாட்டி”, ‘கொயங்கா” ‘நச்சிக்கேதஸ்’ விருதுகளையும் பெற்றுள்ளார். “முகமது பின் துக்ளக்” என்கிற சோவின் அரசியல் நாடக நையாண்டி நாடகம் மிகவும் பிரசித்தி பெற்றது. அது சினிமா படமாகவும் தயாரிக்கப்பட்டு பரபரப்பாக ஓடியது.

    தனது பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களால் அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுபவராக இருந்து வந்த சோ எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை. அதே நேரத்தில் பா.ஜனதா தலைவர்களுடன் நெருக்கம் காட்டினார். 1999-ம் ஆண்டு முதல் 2005 வரை மாநிலங்களவை உறுப்பினராக வாஜ்பாயால் இவர் நியமனம் செய்யப்பட்டார்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உற்ற நண்பராக திகழ்ந்த சோ முக்கிய காலக் கட்டங்களில் பல்வேறு அரசியல் ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார். அவர் முயற்சியால் பல தடவை தமிழகத்தில் அரசியல் கூட்டணிகள் ஏற்பட்டுள்ளன.

    மூப்பனார் தலைமையில் த.மா.கா. உதயமானதற்கும் காரணமாக இருந்தார். ஜெயலலிதா மூப்பனார் கூட்டணியில் அ.தி.மு.க. ஆட்சி அமைவதற்கு காரணமாக இருந்தார்.

    ரஜினியை த.மா.கா.வுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்க வைத்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு.

    காமராஜரை மட்டுமே தலைவராக ஏற்றுக்கொண்ட அவர் எந்த கட்சியிலும் சேரவில்லை. ஆனால் காமராஜர் இடம் பெற்ற பழைய காங்கிரசுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வந்தார்.

    இந்திராகாந்தி நெருக்கடி நிலை கொண்டு வந்தபோது கடுமையாக எதிர்த்தார். இந்திராவின் இந்த நடவடிக்கையை விமர்சித்து துக்ளக் பத்திரிகையில் கருத்து தெரிவித்தார்.
    Next Story
    ×