search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹெலிகாப்டரில் எரிபொருள் குறைவாக இருந்ததால் விமானத்தில் 52 நிமிடங்கள் காத்திருந்த மோடி
    X

    ஹெலிகாப்டரில் எரிபொருள் குறைவாக இருந்ததால் விமானத்தில் 52 நிமிடங்கள் காத்திருந்த மோடி

    ஹெலிகாப்டரில் எரிபொருள் குறைவாக இருந்ததால் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் 52 நிமிடங்கள் விமானத்தில் காத்திருந்தார்.
    சென்னை:

    ஹெலிகாப்டரில் எரிபொருள் குறைவாக இருந்ததால் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் 52 நிமிடங்கள் விமானத்தில் காத்திருந்தார்.

    சென்னையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திரமோடி விமானப்படையின் தனி விமானத்தில் டெல்லியில் இருந்து நேற்று மதியம் 12.02 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். பின்னர் ஹெலிகாப்டரில் அடையாறு விமானப்படை தளத்துக்கு அவர் செல்ல வேண்டும்.

    இதற்காக பிரதமர் செல்ல இருந்த ஹெலிகாப்டரை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஹெலிகாப்டரில் எரிபொருள் குறைவாக இருப்பது தெரிந்தது. எனவே எரிபொருள் நிரப்ப வேண்டும் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து ஹெலிகாப்டரில் எரிபொருள் நிரப்பப்பட்டது.

    இதனால் சுமார் 52 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி, விமானத்தில் காத்து இருந்தார். அதன் பிறகு அவர் விமானத்தில் இருந்து தரை இறங்கி, ஹெலிகாப்டரில் ஏறி அடையாறு விமானப்படை தளத்துக்கு புறப்பட்டு சென்றார்.

    பின்னர் ராஜாஜி மண்டபத்துக்கு சென்று ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பகல் 2.15 மணிக்கு விமானப்படை தனி விமானத்தில் மீண்டும் பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    சென்னை வந்த பிரதமர் மோடி, விமானத்தில் இருந்து தரை இறங்காததால் அந்த நேரத்தில் மும்பை, பெங்களூரு, மதுரை, திருவனந்தபுரம், டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த விமானங்கள் தரை இறங்க அனுமதிக்கப்படவில்லை. அந்த விமானங்கள் வானில் வட்டமிட்டபடி இருந்தன.

    எரிபொருள் நிரப்பப்பட்டு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் ஏறி புறப்பட்டு சென்ற பிறகே வானத்தில் வட்டமிட்ட விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தரை இறங்க அனுமதிக்கப்பட்டன.

    திருவனந்தபுரத்தில் இருந்து கேரள கவர்னர் சதாசிவம், கேரள முதல்-மந்திரி பினராய்விஜயன், முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் வந்த விமானங்களும் உடனடியாக தரை இறக்க அனுமதிக்கப்படவில்லை.

    ஆனால் அந்த விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததால் வானில் வட்டமிட முடியாது என்பதால் கோவைக்கு திருப்பி விடப்பட்டது. அதன்பிறகு அந்த விமானம் மாலை 3 மணிக்கு மீண்டும் சென்னை வந்தது. 
    Next Story
    ×