search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா உடல்நிலை: சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை
    X

    ஜெயலலிதா உடல்நிலை: சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை

    தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாகவும், அதன் தொடர்ச்சியாகவும் தேவையில்லாத வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

    இதனால் பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற வதந்திகள் பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலேயே அதிகம் பரவி வருகிறது.

    குறிப்பாக பள்ளிக்கூடங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக நேற்று தவறான தகவல் ஒன்று தீயாக பரவியது. இதனை தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பின. இதனால் இன்று காலையில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதா? வேண்டாமா? என்கிற குழப்பம் பெற்றோர்கள் மத்தியில் நிலவியது.

    இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தி குறிப்பு எதுவும் போலீஸ் தரப்பில் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட தலைநகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×