search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரணியில் முகமூடி கொள்ளையர்கள் 3 பேர் கைது
    X

    ஆரணியில் முகமூடி கொள்ளையர்கள் 3 பேர் கைது

    ஆரணி பகுதிகளில் முகமூடி அணிந்து வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை, மோட்டார் சைக்கிள் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சரக போலீஸ் நிலைய பகுதிகளில் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்று வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை, மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) எம்.பழனி தலைமையில் ஆரணி டவுன் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜ், ராமலிங்கம், ஜெயராமன், தரணி மற்றும் போலீசார் முள்ளிப்பட்டு பைபாஸ் சாலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஆரணியை அடுத்த கல்பூண்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்ற புல்லட் சுரேஷ் (வயது 28), வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகா சாத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த சத்யா (23) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

    அதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் வாலாஜா, பிரம்மதேசம், கண்ணமங்கலம், களம்பூர், ஆரணி தாலுகா, சேத்துப்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் ஆள் நடமாட்டமில்லாத வீடுகளில் புகுந்து கொள்ளை அடித்தல், முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்று வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது.

    இதேபோல் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் இரும்பேடு கூட்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அரக்கோணம் தாலுகா, சங்கரன்பாடி கிராமத்தை சேர்ந்த உமாபதி (21) என்பவர் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் உமாபதி, சத்யா, சுரேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்பதும், 14 குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தி, அவர்களிடம் இருந்து 46 பவுன் நகைகள், 200 கிராம் வெள்ளிப் பொருட்கள், 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சத்யா, சுரேஷ் என்ற புல்லட் சுரேஷ், உமாபதி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் ஜெயலில் அடைத்தனர்.
    Next Story
    ×