search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடா புயல் வலுவிழக்கிறது: கடலோர பகுதிகள் தப்பின
    X

    நடா புயல் வலுவிழக்கிறது: கடலோர பகுதிகள் தப்பின

    நடா புயல் வலுவிழந்தாலும் அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம்-புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும். சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    வடகிழக்கு பருவ மழை தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கிய நிலையில் தற்போது வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது.

    அந்த புயலுக்கு ‘‘நடா’’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    வங்கக்கடலின் தென் கிழக்கு பகுதியில் இலங்கை அருகே நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்ததாழ்வுப் பகுதியாக இந்த புயல் ஏற்பட்டது. அதன்பிறகு அது தென்மேற்கு திசை நோக்கி அதாவது தமிழகம் நோக்கி நகரத் தொடங்கியது.

    நேற்று அதிகாலை அது புயலாக மாறி மிகவும் வலுவான நிலையை அடைந்தது. நேற்று மதியம் அந்த புயல் சென்னையில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக் கடலில் மையம் கொண்டிருந்தது. நேற்றிரவு நடா புயலின் வேகம் மேலும் அதிகரித்தது.

    இன்று (வியாழக்கிழமை) காலை நடா புயல் தமிழக கடலோரப் பகுதியை நெருங்கி வந்தது. புயல் நெருங்கி விட்டதால் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசத் தொடங்கியுள்ளது. கடலும் கொந்தளிப்பாகக் காணப்படுகிறது.

    இதையடுத்து தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் அனைவரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. கடலுக்குள் மீன் பிடிக்க சென்றிருந்தவர்களும் அவசரம், அவசரமாக திருப்பி அழைக்கப்பட்டனர்.

    நடா புயல் கடலோரப் பகுதியை நெருங்கி வந்து விட்டதால் தமிழ்நாடு- புதுச்சேரியில் இன்று காலை முதல் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சில இடங்களில் தூறலும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

    இன்று மதியத்துக்குப் பிறகு தமிழக கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது. இன்றிரவும் நாளை அதிகாலையும் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் குறாவளி காற்றுடன் மழை பெய்யும் என்றும், பொது மக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை ‘நடா’ புயலின் நகர்விலும், வேகத்திலும் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அந்த புயல் வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை இலாகா கூறியுள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ‘நடா’ புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது. இந்த புயலின் மேல் அடுக்குக்கும் கீழ் அடுக்குக்கும் இடையே காற்றின் வேறுபாடு மிக அதிகமாக உள்ளது.

    இதன் காரணமாக அடுத்த 12 மணி நேரத்தில் நடா புயல் வலுவிழந்து விடும். இந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி வருகிறது.

    ‘நடா’ புயல் வலுவிழந்தாலும் அது நாளை (வெள்ளி) அதிகாலை கடலூர்-வேதாரண்யம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம்-புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும். சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் மழை மிதமாக இருக்கும். அடிக்கடி தரைக்காற்று வீசும். வானம் மேக மூட்டமாக காணப்படும்.

    புயல் வலுவிழந்தாலும் மீனவர்கள் நாளை கடலுக் குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

    கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. தலைஞாயிறில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடா புயல் வலு குறைந்தாலும், அது கரையை கடக்கும் போது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அபாயம் ஏற்பட் டுள்ளது. இதை கருத்தில் கொண்டு அனைத்துத் துறைகள் சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் உள்பட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், வானூர் தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கல்லூரிகளில் இன்றும், நாளையும் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    பலத்த மழையால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற தேசிய பேரிடர் மீட்புப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடலூருக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் 3 படை பிரிவுகள் விரைந்துள்ளன. அவர்கள் கடலூரில் பல இடங்களில் தயார் நிலையில் உள்ளனர்.

    சென்னை, நாகையிலும் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்படலாம் என்று ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் சிறப்பு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மழை பாதிப்பை எதிர்கொள்ள வருவாய்துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். சென்னையில் மீட்புப் படகுகள் முதல் பாம்பு பிடிப்பவர்கள் வரை அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

    மழை பாதிப்புகளில் சிக்குபவர்கள் உதவி தேவைப்பட்டால் 1070, 1077 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்களில் அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    புயல் மீட்பு பணிக்கு ‘சக்தி, சாத்புரா’ என்ற இரண்டு கப்பல்கள் வருகின்றன. கடற்படை விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    Next Story
    ×