search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்: டாக்டர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
    X

    சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்: டாக்டர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

    கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    குழித்துறை:

    மார்த்தாண்டம் பம்மம் பகுதியைச் சேர்ந்தவர் ஏபல், (வயது 38). ஹோமியோபதி டாக்டரான இவருக்கு சொந்தமாக 2½ ஏக்கர் ரப்பர் தோட்டம் குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள மரங்களை வெட்ட தன்னிடம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலக ஊழியர் ஒருவர் மீது டாக்டர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார்.

    இது தொடர்பாக டாக்டர் ஏபல் மார்த்தாண்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்தில் உள்ள ரப்பர் மரங்கள் மிகவும் முதிர்ந்த நிலையில் காணப்பட்டதால் அவற்றை நான், வெட்ட முடிவு செய்தேன். தற்போது மரங்களை வெட்ட வேண்டும் என்றால் அரசின் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

    எனவே நான், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தேன். ஆனால் அங்கிருந்து தடையில்லா சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்தனர். எனவே நான் அங்கு அடிக்கடி சென்று எனக்கு சான்றிதழ் வழங்கும்படி வற்புறுத்தினேன்.

    இதை தொடர்ந்து அந்த அலுவலகத்தில் இருந்த கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளர் ஒருவர் எனது ரப்பர் தோட்டத்தை பார்வையிட்டார். அப்போது அவர், தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்றால் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டுமென்று கேட்டார்.

    நான் முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தேன். அதன் பிறகு அலுவலகத்திற்கு நேரில் சென்று மேலும் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தேன். அதன் பிறகு எனக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கினர். மீதி பணத்தை விரைவில் கொடுக்க வேண்டுமென்று வற்புறுத்தினார்கள்.

    தொடர்ந்து என்னிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதால் நான், அனைத்தையும் எனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளேன். இதுபற்றி கலெக்டர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை சந்தித்து புகார் கொடுக்க உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் தன்னிடம் உள்ள அரசு ஊழியர் லஞ்சம் வாங்கும் காட்சியையும் டாக்டர் ஏபல் வெளியிட்டார். அந்த வீடியோ காட்சி வாட்ஸ்-அப்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×