search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாய், தந்தை, தங்கையை வெட்டிக் கொன்ற வாலிபர்
    X

    காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாய், தந்தை, தங்கையை வெட்டிக் கொன்ற வாலிபர்

    காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாய், தந்தை, தங்கையை வெட்டிக் கொன்ற தமிழரசனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை சந்தை வீதியை சேர்ந்தவர் மோகன் (வயது 55). மின்வாரிய அதிகாரி. மோகன், அவரது மனைவி ராஜேஸ்வரி (43), மகள் சுகன்யா (24) ஆகியோர் நேற்று கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

    மோகனின் மகன் தமிழரசன் (27) மார்பில் காயத்துடன் மயங்கி கிடந்தார். திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலையுண்ட சுகன்யா, என்ஜினீயரிங் படித்துவிட்டு பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். தமிழரசன் டிப்ளமோ படித்துள்ளார். ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    இருவரும் வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமையில் வீட்டுக்கு வந்து விட்டு திங்கட்கிழமை அதிகாலை பணிக்கு செல்வது வழக்கம். சுகன்யாவுக்கு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற ஏற்பாடுகள் நடந்தது.

    இந்த நிலையில் தான் சுகன்யா உள்பட 3 பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்ட விசாரணையில் மின்வாரிய அதிகாரி மகன் தமிழரசன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    போலீசார் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    இந்த நிலையில் தமிழரசனிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தமிழரசனுக்கு ஓசூர் கம்பெனியில் உடன் வேலை செய்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆனாலும், தங்களது காதலை பெற்றோரிடம் புரியவைத்து காதலியை திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் தமிழரசன் இருந்தார்.

    சில நாட்களுக்கு முன்பு, காதலியின் அவரச தேவைக்காக ரூ.2 லட்சம் பணத்தை ரொக்கமாக தயார் செய்து தமிழரசன் கொடுத்துள்ளார். தனது காதல் விவகாரத்தை மறைமுகமாகவே அவர் வைத்திருந்தார்.

    இந்த நிலையில், தமிழரசனின் தங்கை சுகன்யா வார விடுமுறையில் வீட்டிற்கு வந்த போது, அண்ணனின் காதல் விவகாரத்தை பெற்றோரிடம் போட்டு உடைத்தார். அண்ணனின் காதலி வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்றும், அவருக்கு பண உதவி செய்தது குறித்தும் சுகன்யா பெற்றோரிடம் தெரிவித்துவிட்டார்.

    இதை கேட்ட பெற்றோர் தமிழரசனை கண்டித்தனர். காதலை கைவிடும் படி கூறி எச்சரித்தனர். இதனால் மனமிறுகிய நிலையில் காணப்பட்ட தமிழரசன் காதலை காட்டிக் கொடுத்த தங்கை மீது ஆத்திரமடைந்தார்.

    நேற்று முன்தினம் மோகன் இரவு பணிக்கு சென்றுவிட்டார். வீட்டில் தாய், தங்கையுடன் மட்டும் தமிழரசன் இருந்தார். காதலியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும், தனது விருப்பத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்றும் தாயிடம் கூறி கெஞ்சியுள்ளார்.

    தாய் சமரசமாகவில்லை. இரவு முழுவதும் காதல் விவகாரம் நீடித்தது. தாயுக்கும், மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நடுவில் தங்கையின் குறுக்கீடும் அடிக்கடி இருந்ததால் பிரச்சினை பூதாகரமானது.

    தகராறு முற்றிய நிலையில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற தமிழரசன், கத்தியால் தங்கையை தாக்கியுள்ளார். தன்னுடைய காதல் கைகூடாததற்கு காரணம் தங்கை என எண்ணிய தமிழரசன் கொஞ்சமும் இரக்கமின்றி சுகன்யாவை கழுத்தை அறுத்துக் கொன்றார்.

    மகள் கண்முன் கொல்லப்படுவதை தடுக்க முயன்ற தாய் ராஜேஸ்வரியையும் தமிழரசன் கத்தியால் வெட்டிக் கொலை செய்தார். தாய், தங்கையின் பிணங்களுக்கு நடுவே தேங்கி இருந்த ரத்தத்தில் கத்தியுடன் உட்கார்ந்துக் கொண்டு தமிழரசன் தப்பிப்பது எப்படி? தந்தையிடம் என்ன சொல்வது? என திட்டம் வகுத்தார்.

    காதல் விவகாரம் தெரிந்த ஒரே நபர் தந்தை தான். எனவே அவரையும் தீர்த்து கட்டிவிட்டால் தப்பி விடலாம் என தமிழரசன் எண்ணினார். அதன்படி விடிந்ததும் வீடு திரும்பிய தந்தை மோகனையும் கத்தியால் வெட்டி தீர்த்து கட்டினார்.

    மரண ஓலம் கேட்டு ஓடிவந்த கிராம மக்களிடம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக கத்தியால் தனது மார்பை கீறிக் கொண்டார். தாய், தந்தை, தங்கையை முகமூடி அணிந்த நபர் வெட்டிக் கொன்று விட்டதாகவும், தன்னையும் கொல்ல முயன்றதாகவும் நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் தமிழரசனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×