search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை தீவுத்திடலில் ரூ.10 கோடிக்கு பட்டாசு விற்பனை
    X

    சென்னை தீவுத்திடலில் ரூ.10 கோடிக்கு பட்டாசு விற்பனை

    தீபாவளிக்கு இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் ரூ.10 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை நடந்துள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவு வியாபாரம் நடக்கவில்லை என்று வியாபாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதாலும், சுற்றுப்புறச்சூழலை மாசு ஏற்படுத்துவது குறித்த விழிப்புணர்வு மற்றும் பட்டாசுகள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பட்டாசு விற்பனை இந்த ஆண்டு குறைந்ததாக பரவலாக கூறப்படுகிறது.

    சென்னை தீவுத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பட்டாசு கடைகளில் எதிர்பார்த்த அளவு கூட்டத்தை காணமுடியவில்லை. இதனால் வியாபாரமும் எதிர்பார்த்த அளவு விற்பனை நடக்கவில்லை என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு வியாபாரிகள் நலச்சங்க உறுப்பினர் சிராஜூதீன் கூறியதாவது:-

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்ய 58 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    அவற்றில் கடந்த 20-ந் தேதி முதல் இன்று (நேற்று) வரை ரூ.10 முதல் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள விதவிதமான பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு ரூ.20 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.10 கோடி மதிப்பில் பட்டாசு விற்பனையா னது. இது கவலை அளிப்பதாக உள்ளது.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் தீபாவளி கொண்டாடவில்லை. இதனால் பட்டாசு விற்பனையும் குறைந்துவிட்டது.

    கடந்த ஆண்டு 70 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஆண்டு பெய்த மழையால் ரூ.10 கோடிக்கு பட்டாசு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் வெறும் ரூ.3 கோடி மதிப்பில் மட்டுமே பட்டாசு விற்பனை செய்யப்பட்டன.

    ஒதுக்கப்பட்ட கடைகள் தவிர தீவுத்திடலில் ஆபத்தான பொருளான பட்டாசை, ஆபத்தான முறையில் நடந்து கொண்டே விற்பனை செய்தனர். அதேபோல் சிவகாசியில் இருந்த பட்டாசு உற்பத்தியாளர்களும் தீவுத்திடலில் வந்து விற்பனை செய்தனர்.

    இந்த ஆண்டு கடந்த 27-ந் தேதி வரை வியாபாரம் மந்தமாகவே தான் இருந்தது. அதற்கு பிறகு சூடுபிடித்தது. பொதுவாக தீபாவளி என்றாலே மழையும் சேர்ந்தே வரும். ஆனால் இந்த ஆண்டு மழை இல்லாததால் வியாபாரமும் தடையில்லாமல் நடந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×