search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெறுத்தது பட்டாசை மட்டுமல்ல சீனாவையும் தான் ! - தலையங்கம்
    X

    வெறுத்தது பட்டாசை மட்டுமல்ல சீனாவையும் தான் ! - தலையங்கம்

    தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு துணை போகும் சீனா மீது இந்தியர்கள் அதிருப்தியில் உள்ளதுடன், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பட்டாசுகளையும் வெறுத்துள்ளனர்.
    சென்னை:

    விடிந்தால் தீபாவளி.

    எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து இறைவழிபாடு செய்து, பட்டாசு வெடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்வோம்.

    இந்த மரபுப்படியான வழக்கங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு புதிய மன மாற்றத்தை இந்த தீபாவளி மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.

    பட்டாசு என்றாலே சிவகாசிதான். நாடு முழுவதும் பட்டாசு சப்ளை செய்து உள்நாட்டின் மிகப்பெரிய வியாபாரத்துக்கு சீனாக்காரன் ஆப்பு வைத்து விடுவானோ என்று இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் பீதி அடைந்தனர். காரணம், கடந்த சில ஆண்டுகளாக சீன பட்டாசுகள் இந்திய மார்கெட்டுக்குள் புகுந்து விளையாடியது. விலையும் குறைவு, வியாபாரிகளுக்கும் லாபம் அதிகம் கிடைப்பதால் சீன பட்டாசுகள் தங்கு தடையில்லாமல் புழங்கி வந்தது.

    இந்த ஆண்டு அரசு சீன பட்டாசுகளுக்கு தடை விதித்தது. அப்படியிருந்தும் 1500 கண்டெய்னர்களில் சீன பட்டாசுகள் இந்தியா முழுவதற்கும் வந்துள்ளது.

    ஆனால் சீன பட்டாசுகளை வாங்குவதில்லை என்ற உணர்வு நம்மவர்களிடம் ஏற்பட்டுள்ளது. யாரும் விரும்பி வாங்கவுமில்லை.

    50 காசு மிட்டாய் முதல், மின்சாதன பொருட்கள் என்று தயாரிக்காத பொருட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா பொருட்களையுமே சீனா தயாரிக்கிறது. அத்தனை பொருட்களையும் தாராளமாக சந்தைப்படுத்தும் இடமாக இந்தியாவை சீனா பயன்படுத்துகிறது.

    சீன பொருளாதாரத்துக்கு கை கொடுக்கும் இந்தியாவுக்கு துணை நிற்கும் பொறுப்பு சீனாவுக்கு உண்டு.

    ஆனால் இந்தியாவை துண்டாட துடிக்கும் பாகிஸ்தானுக்கு துணை போவதால் நாட்டுமக்களின் கோபத்துக்கு அந்த நாடு ஆளாகி இருக்கிறது.

    உரி ராணுவமுகாம் தாக்குதலுக்கு உலக நாடுகளெல்லாம் கண்டனம் தெரிவித்த போதும் சீனா கண்டு கொள்ளவில்லை.

    சீனாவின் இந்த போக்குதான் மக்களின் மனப்போக்கிலும் மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

    சமூக வலைத்தளங்களில் சீனாவுக்கு பாடம் புகட்ட சீன பொருட்களை புறக்கணிப்போம் என்ற பிரசாரம் அதிக அளவில் பரவி வருகிறது.

    அதற்கு முதற்கட்டமாக சீனபட்டாசுகளை மக்கள் புறக்கணித்துள்ளார்கள். இது ஒரு நல்ல தொடக்கம். சீனாவுக்கு நாட்டு மக்கள் கொடுத்துள்ள தக்க பதிலடி. இப்படியே போனால் மொத்த பொருட்களையும் புறக்கணிக்கும் நிலைக்கும் செல்வோம் என்பதை உணர்த்தி இருக்கிறார்கள்.

    சீனாவின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 2 சதவீதத்தை மட்டும் தான் இந்தியாவில் சந்தைப்படுத்துவதாகவும், அதை தடை செய்தால் இந்தியாவில் எந்த முதலீடும் செய்யமாட்டோம் என்று சீனா எச்சரித்துள்ளது.

    சீனாவை நம்பி இந்தியா இல்லை. சொந்த காலில் நிற்க பழகி பல ஆண்டுகள் ஆகி விட்டது. இனிமேல் இந்த உருட்டலும், மிரட்டலும் எடுபடாது.

    எங்கே அடித்தால் வலிக்குமோ அது மக்களுக்கும் தெரியும். இப்போது அந்த அடியைத்தான் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள்.

    உலக மயமாதல் கொள்கையை காரணம் காட்டி விற்பனைக்கு தடை விதிக்க முடியாத சூழ்நிலையை சீனா உருவாக்கலாம்.

    பரவாயில்லை. கடை விரித்தும் வியாபாரம் ஆகாவிட்டால் கடையை கட்டிக்கொண்டு ஓட வேண்டியது தானே வரும்! அதைதான் மக்கள் செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.

    அன்னிய பொருளை புறக்கணித்து சுதேசி உணர்வை ஊட்டி அன்னிய நாடுகளை ஆட்டம் காண வைத்து புது தாக்குதல் வித்தையை கற்றுத்தந்தவர் காந்தி.

    அந்த தேச தந்தையின் வழி நடக்கும் நாட்டு மக்கள் பாடம் புகட்ட தொடங்கி இருக்கிறார்கள்.

    தீமைகள் அகல தீபாவளி. நம்மை சுற்றி இருக்கும் தீமைகளை அகற்ற இந்ததீபாவளியில் மக்கள் எடுத்துள்ள முயற்சி தொடரட்டும், வெல்லட்டும்.
    Next Story
    ×