search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள்: 2 நாளில் 3 லட்சம் பேர் வெளியூர் பயணம்
    X

    தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள்: 2 நாளில் 3 லட்சம் பேர் வெளியூர் பயணம்

    தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 2 நாட்களில் சுமார் 3 லட்சத்து 21 ஆயிரம் பயணிகள் அரசு பஸ்களில் பயணம் செய்துள்ளனர்.
    சென்னை:

    தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் பொது மக்கள் வசதிக்காக தமிழக அரசு 22 ஆயிரம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

    கடந்த 26, 27 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து சுமார் 8 ஆயிரம் சிறப்பு பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டன.

    சென்னையில் இந்த ஆண்டு சிறப்பு பஸ்கள் 5 இடங்களில் இருந்து இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பொது மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

    வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்லக்கூடிய பஸ்கள் சென்னை நகருக்கு உள்ளே நெரிசலில் சிக்கி பல மணி நேரம் நின்றதால் பொது மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்த நிலை மாறி இந்த புதிய முயற்சிகள் விளைவால் மக்கள் எவ்வித சிரமமின்றி பயணத்தை தொடர முடிந்தது.

    2 நாட்களில் சுமார் 3 லட்சத்து 21 ஆயிரம் பயணிகள் அரசு பஸ்களில் பயணம் செய்துள்ளனர். நேற்று முன்தினம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேரும், நேற்று ஒரு லட்சத்து 86 ஆயிரம் பயணிகளும் பயணம் செய்துள்ளனர். நேற்று 4 ஆயிரம் சிறப்பு பஸ்களும் பல்வேறு நகரங்களுக்கு விடப்பட்டு இருந்தாலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் ‘ஸ்பேர்’ பஸ்களாக வைக்கப்பட்டு இருந்த பஸ்களும் இயக்கப்பட்டன.

    எந்த பகுதிகளுக்கும் செல்வதற்கு பஸ் இல்லை என்ற சூழல் உருவாக்கக் கூடாது என்பதில் போக்குவரத்து கழகம் உறுதியாக இருந்தது.

    நேற்றை விட மேலும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் நிர்ணயிக்கப்பட்ட சிறப்பு பஸ்களை விட கூடுதலாக பஸ்களை இயக்கவும் அதிகாரிகள் தயாராக உள்ளனர். எந்தெந்த பகுதிகளுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்பதை அதிகாரிகள் கண்காணித்து அதற்கேற்றவாறு சிறப்பு பஸ்களை இயக்கி வருகின்றனர்.

    தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். கோயம்பேடு பஸ்நிலையம், மாநில தேர்தல் ஆணையம், பூந்தமல்லி, தாம்பரம் சானிட்டோரியம் ஆகிய பஸ் நிலையங்களில் அவர் ஆய்வு செய்தார்.

    மக்கள் கூட்டத்தை பார்த்து அதற்கேற்றவாறு பஸ்களை இயக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். மேலும் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். சிறப்பு பஸ்கள் தங்களுக்கு வசதியாக உள்ளதா? பயணத்தில் எதுவும் சிரமம் இருக்கிறதா? என்று கேட்டார்.

    பஸ்சுக்குள் ஏறிச் சென்று உள்ளே இருந்த பயணிகளிடமும் கருத்து கேட்டார். அதற்கு அவர்கள் தீபாவளியை கொண்டாடுவதற்காக செல்லும் எங்களுக்கு சிறப்பான பஸ் வசதியை அரசு செய்து கொடுத்துள்ளது. குறைந்த கட்டணத்தில் மகிழ்ச்சியாக பயணம் செய்கிறோம். மேலும் பயணத்தில் எவ்வித நெரிசலும், இடம் கிடைப்பதற்கு கஷ்டமோ ஏற்படவில்லை.

    ஒரே இடத்தில் இருந்து பஸ்களை இயக்குவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி குறிப்பிட்ட நேரத்திற்கு ஊர் போய் சேர முடியாது.

    ஆனால் இந்த முறை சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டதால் தீபாவளி பயணம் சந்தோ‌ஷமாக அமைந்துள்ளது என்று பாராட்டு தெரிவித்தனர்.

    பின்னர் அமைச்சர் ஊரப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ்நிலையத்திற்கு சென்றார். பயணிகளுக்கு எவ்வித குறையும் ஏற்படாமல் பயண ஏற்பாடுகளை அவர் கண்காணித்தார். அதிகாலை 2.30 மணி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதை விஜய பாஸ்கர் நேரில் சென்று பார்வையிட்டார்.
    Next Story
    ×