search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் நலக்கூட்டணி அவசர ஆலோசனை கூட்டம்: காவிரி பிரச்சினை குறித்து விவாதித்ததாக வைகோ பேட்டி
    X

    மக்கள் நலக்கூட்டணி அவசர ஆலோசனை கூட்டம்: காவிரி பிரச்சினை குறித்து விவாதித்ததாக வைகோ பேட்டி

    மக்கள் நலக்கூட்டணி அவசர ஆலோசனை கூட்டம் ம.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. காவிரி பிரச்சினை குறித்து விவாதித்ததாக வைகோ கூறினார்.
    சென்னை:

    அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு நவம்பர் 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை களம் இறங்கியுள்ளது. மக்கள் நலக்கூட்டணி இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது.

    ஆனால் இந்த 3 தொகுதிகளில் களம் காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கருத்தை இந்த கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி விரும்பவில்லை எனவும், இதனால் மக்கள் நலக்கூட்டணிக்குள் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது.

    இதற்கிடையே, காவிரி பிரச்சினை தொடர்பாக தி.மு.க. கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்வம் காட்டி வந்தது. ஆனால் அதற்கு மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடைசி நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தொடர்ந்து மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதால், கூட்டணிக்குள் விரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

    இந்தநிலையில் மக்கள் நலக்கூட்டணியின் அவசர ஆலோசனை கூட்டம் ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில், காவிரி பிரச்சினை தொடர்பாக தி.மு.க. கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டம் மற்றும் 3 தொகுதி தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களாகிய நாங்கள் காவிரி விவகாரம் தொடர்பாக விவாதித்தோம். 3 தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×