search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகளில் விற்பனையின்றி நேற்று பகலில் வெறிச்சோடி இருந்ததை படத்தில் காணலாம்.
    X
    சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகளில் விற்பனையின்றி நேற்று பகலில் வெறிச்சோடி இருந்ததை படத்தில் காணலாம்.

    இந்த ஆண்டு களை இழந்த தீபாவளி: பட்டாசு, இனிப்பு விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தகவல்

    தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளிக்கு வழக்கமான உற்சாகம் காணப்படவில்லை. பட்டாசு, இனிப்பு விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை :

    தீபாவளி பண்டிகை உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமான ஒன்றாகும். வழக்கமாக தீபாவளி பண்டிகை நெருங்கும் போது ஆங்காங்கே பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் கேட்கும். இரவு நேரங்களில் வானில் வண்ண வண்ண நிறங்களில் பட்டாசுகள் வெடித்து சிதறும்.

    இதன் மூலம் தீபாவளி பண்டிகை உற்சாகம் ஒரு வாரத்துக்கு முன்பே அனைவரையும் தொற்றிக் கொள்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 34 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால், அ.தி.மு.க.வினர் மத்தியில் வழக்கமான தீபாவளி பண்டிகை உற்சாகம் காணப்படவில்லை.

    அ.தி.மு.க.வின் தோழமை கட்சியினரும், பெரும்பாலான மக்களும் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடும் மனநிலையில் இல்லாமல் உள்ளனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால், தீபாவளி பண்டிகையை கொண்டாடும் ஒரு சில தி.மு.க.வினர் மத்தியிலும் உற்சாகம் காணப்படவில்லை.

    இதனால் கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை பட்டாசு, இனிப்பு விற்பனை மந்தமடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கடந்த 40 ஆண்டுகளாக சென்னை பாரிமுனை மலையபெருமாள் தெருவில் மொத்த பட்டாசு விற்பனை கடை நடத்தி வரும் ‘எம்.எஸ்.மணியம் அன்ட் கோ’ உரிமையாளர் எஸ்.எம்.மூர்த்தி கூறியதாவது:-

    வழக்கமாக தீபாவளி பண்டிகையின் போது மகாளய அமாவாசை தொடங்கி தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் வரையில் பட்டாசு விற்பனை அமோகமாக இருக்கும். அன்பளிப்பாக வழங்கப்படும் ‘கிப்ட் பாக்ஸ் பட்டாசுகள்’ ஆர்டர்கள் குவியும்.

    ஆனால் இந்த ஆண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால் அ.தி.மு.க.வினர் மட்டுமின்றி பொதுமக்கள் பலரது மத்தியிலும் தீபாவளி பண்டிகை உற்சாகத்தை பார்க்க முடியவில்லை.

    அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் பலர் எங்கள் கடையில் தான் மொத்தமாக பட்டாசுகளை வாங்கி செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு அ.தி.மு.க.வினர் யாரும் பட்டாசு வாங்க வரவில்லை. இந்த ஆண்டு தீபாவளிக்கு இரவை பகலாக்கும் ‘ரோமன் கேண்டல்ஸ்’, ‘ஏரியல் அவுட்’, ‘சூட்டிங் ஸ்டார்’, ‘கலர் சேன்ஜிங் பட்டர்-பிளே’ என்று 20-க்கும் மேற்பட்ட புதுரக பட்டாசுகள் அறிமுகமாகி உள்ளது. எனினும் பொதுமக்கள் மத்தியில் வாங்குவதற்கு ஆர்வம் காணப்படவில்லை. இதனால் கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் பட்டாசு விற்பனை மந்தமாக காணப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தீவுத்திடல் மொத்த பட்டாசு வியாபாரி ஒருவர் கூறும்போது, ‘முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோரது உடல்நலப் பாதிப்பு, மாத கடைசி போன்ற காரணங்களால் பட்டாசு விற்பனை மந்தமாக உள்ளது. இதுவரையில் 40 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது’ என்றார்.

    பட்டாசு விற்பனையை போன்றே இனிப்பு வகைகள் விற்பனையும் மந்தமாக உள்ளது. சென்னையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, மேற்கு மாம்பலம், புரசைவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு சில வீடுகளில் பலகாரங்கள் செய்யும் நிபுணத்துவம் வாய்ந்த பெண்கள் இனிப்பு-காரம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

    குறிப்பாக கை சுத்து முருக்கு, அதிரசம், ஜாங்கிரி, பாதுஷா, மிக்சர், லட்டு, ரவா லட்டு, பக்கோடா போன்றவை தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர சில பெண்கள் வீடுகளுக்கு சென்றே பலகாரங்களை செய்து தரும் நடைமுறையும் உள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவு பலகாரங்கள் விற்பனை மந்தமாகவே இருந்து வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த ஆண்டு பலகாரங்களை விற்பனை செய்யும் பெண்கள் சிலர் கூறியதாவது:-

    ஆண்டுக்கு ஆண்டு பலகாரங்கள் தயாரிப்பதற்கான அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே செல்வதால், பலகாரங்களின் விலையும் சற்று அதிகரித்து விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருவதுடன் மந்தமான விற்பனை தான் இருக்கிறது.

    சர்க்கரை நோயை காரணம் காட்டி இனிப்பான பலகாரங்களை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். அதேநேரம் காரமான பலகாரங்களை அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர். அதுவும் பெரிய அளவில் விற்பனை நடப்பதில்லை. வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பால்கோவா போன்ற இனிப்பு பதார்த்தங்களை ஒவ்வொரு ஆண்டும் அதிகளவு வாங்கி செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு அதுவும் விற்பனை குறைந்து வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×