search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரியில் பழங்கால சாமி சிலைகள் கடத்தலில் பிரெஞ்சு தம்பதி உடந்தை?: விசாரணையில் தகவல்
    X

    புதுச்சேரியில் பழங்கால சாமி சிலைகள் கடத்தலில் பிரெஞ்சு தம்பதி உடந்தை?: விசாரணையில் தகவல்

    புதுச்சேரியில் ஒரு வீட்டில் இருந்து 11 பழங்கால சாமி சிலைகளை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிலைகள் கடத்தப்பட்டதில் பிரெஞ்சு தம்பதியும் உடந்தையாக இருப்பதாக விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.
    புதுச்சேரி:

    சிலை கடத்தல் வழக்கில், சென்னை தொழிலதிபரும், சிலை கடத்தல் மன்னனுமான தீனதயாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீடு மற்றும் குடோனில் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகளில் பச்சைநிற கருங்கல்லால் ஆன 2 பழங்கால சிவலிங்கங்கள் இருந்தன. இந்த சிலைகள் வேலூர் மாவட்டம், மேல்பாடிகோவிலில் இருந்து திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இந்த சிலைகளை தீனதயாளனுக்கு புதுச்சேரியில் கலைப்பொருட்கள் விற்பனைக் கூடம் நடத்தி வரும் தொழிலதிபர் புஷ்பராஜன் என்பவர் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் புஷ்பராஜனை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் விசாரித்ததில் மேல்பாடி கோவிலில் இருந்து 16 பழங்கால சிலைகள் திருடியதாகவும், 2 சிலைகளை தீனதயாளனிடம் கொடுத்து விட்டு, மீதி சிலைகள் புதுச்சேரியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

    இதனைதொடர்ந்து நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி சென்ற போலீசார், அங்கு உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம் அருகே பிரெக்ட்ரிக் ஒசானம் 3-வது குறுக்குத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 11 பழங்கால சாமி சிலைகள் பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து புஷ்பராஜனின் மேலாளர் ரஞ்சித்(35) என்பவரை கைது செய்தனர்.

    நேற்று காலை 11 சிலைகளையும் போலீசார் ஒரு வேனில் ஏற்றி கோர்ட்டில் ஒப்படைப்பதற்காக பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு சென்றனர்.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட ரஞ்சித், சிலை கடத்தலுக்கு பிரெஞ்சு குடியுரிமை பெற்ற தம்பதி உடந்தையாக இருந்ததாக போலீசில் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதன்பேரில் அவர்களை பிடித்து விசாரிக்கவும் போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். அவரது தாயார் எல்லையம்மாள், மனைவி தனலட்சுமி ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டின் 2-வது மாடியில் புஷ்பராஜன் புராதன பொருட்கள் விற்பனை செய்யும் கலைக்கூடம் நடத்தி வருகிறார். அங்கு ஏராளமான சிலைகள், கலைப்பொருட்கள் உள்ளன. ஆனால் அக்கம்பக்கத்தினரிடம் வெளிநாடுகளுக்கு ரோஜாப்பூ ஏற்றுமதி செய்வதாக கூறி வந்துள்ளார்.

    இங்குள்ள சிலைகளில் தமிழ்நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட சாமி சிலைகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே கோர்ட்டு அனுமதி பெற்று போலீசார் அங்கும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும், மீதமுள்ள 3 சிலைகள் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளன? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கைப்பற்றப்பட்ட சிலைகள் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறியதாவது:-

    கைப்பற்றப்பட்ட சிலைகளில் ஒரு பெரிய நடராஜர் சிலையும் ஒன்று. இதன் விலை மட்டுமே ரூ.32 கோடியே 80 லட்சம் மதிப்புடையது. புஷ்பராஜனை கைது செய்து அவர் கொடுத்த தகவலின்பேரில் இங்கு வந்து சிலைகளை பறிமுதல் செய்தோம்.

    இந்த சிலைகளை சென்னையில் ஆய்வு நடத்திய பிறகுதான் இவை மேல்பாடி கிராமத்தில் உள்ள கோவிலில் இருந்து திருடப்பட்டவையா? என்பது குறித்து உறுதியாக தெரியவரும்’

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே கைப்பற்றப்பட்ட சிலைகள் கடத்தப்பட்டவை அல்ல என்று வீட்டு உரிமையாளரின் வக்கீல் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×