search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி சிறப்பு பஸ்கள்:  முதல் நாளான நேற்று 3 ஆயிரத்து 254 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன
    X

    தீபாவளி சிறப்பு பஸ்கள்: முதல் நாளான நேற்று 3 ஆயிரத்து 254 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன

    தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம் நேற்று தொடங்கியது. முதல்நாளில் 3 ஆயிரத்து 254 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் சென்று கொண்டாட விரும்புபவர்கள், எவ்வித சிரமமும் இல்லாமல் அவரவர் ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு தீபாவளியையொட்டி, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 11 ஆயிரத்து 225 சிறப்பு பஸ்கள் உள்பட தமிழகம் முழுவதும் 21 ஆயிரத்து 289 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி தீபாவளி சிறப்பு பஸ்களின் சேவை நேற்று தொடங்கியது. சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று காலை முதலே மதுரை, நெல்லை, திருச்சி, நாகர் கோவில், சேலம், கோவை, தூத்துக்குடி வேளாங்கண்ணி, ராமநாதபுரம், காரைக்குடி உள்பட பல்வேறு வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    அதேபோல சென்னையில் அண்ணாநகர் (மேற்கு), கோயம்பேடு மாநில தேர்தல் ஆணைய அலுவலக பஸ் நிலையம், தாம்பரம் சானடோரியம் அண்ணா பஸ் நிலையம் (மெப்ஸ்), பூந்தமல்லி ஆகிய 4 தற்காலிக பஸ் நிலையங்களிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    முதல் நாளான நேற்று (புதன்கிழமை) 3 ஆயிரத்து 254 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. என்றபோதிலும், நேற்று காலை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. சென்னையில் இருந்து புறப்படும் பெரும்பாலான வெளியூர் பஸ்கள் தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிளம்பியதால் கோயம்பேட்டில் வழக்கமான கூட்டத்தை பார்க்க முடியவில்லை. மேலும், கோயம்பேடு பகுதியிலும் வழக்கமான போக்குவரத்து நெரிசல்தான் காணப்பட்டது.

    ஆனால் நேற்று மாலையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஓரளவு பயணிகள் கூட்டம் இருந்தது. முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு பஸ்கள் எந்த நடைமேடையில் இருந்து புறப்படுகிறது? என்கிற விவர பலகை கோயம்பேடு பஸ் நிலைய நுழைவுவாயிலில் வைக்கப்பட்டு உள்ளது.

    இதுதவிர பஸ் நிலையத்தின் முக்கிய இடங்களிலும் இந்த விவர பலகை வைக்கப்பட்டு உள்ளது. மேலும், பயணிகளின் வசதிக்காக ஆங்காங்கே சேவை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஒலி பெருக்கிகள் மூலம் பஸ் புறப்படும் விவரமும் அறிவிக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு பஸ் நிலைய வளாகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    2-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) 3 ஆயிரத்து 992 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கடைசி நாளான நாளை 3 ஆயிரத்து 979 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்பும் வகையில் 30-ந்தேதி முதல் நவம்பர் 1-ந்தேதி வரையிலான 3 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ள சிறப்பு பஸ்களிலும் பயணிகள் ஆர்வத்துடன் முன் பதிவு செய்து வருகின்றனர்.

    நேற்று மாலை வரை சென்னையில் 78 ஆயிரத்து 574 பேரும், வெளி மாவட்டங்களில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 305 பேரும் சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்து உள்ளனர்.

    அதேபோல தீபாவளி முடிந்து சென்னை திரும்புவதற்காக 58 ஆயிரத்து 837 பேரும், வெளிமாவட்டங்களில் 60 ஆயிரத்து 476 பேரும் முன்பதிவு செய்து இருக்கின்றனர்.
    Next Story
    ×