search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரும்பு நிலுவை தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்
    X

    கரும்பு நிலுவை தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்

    கரும்பு நிலுவை தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் கஞ்சிக்கலயம் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையானது 2015, 2016-ம் ஆண்டு அரவை பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட கரும்பினை வெட்டி, அரவை செய்யப்பட்ட கரும்பிற்கு டன் ஒன்றுக்கு ரூ.2,850 வழங்க வேண்டும். ஆனால் டன்னுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் பட்டுவாடா செய்யப்பட்டு மீதமுள்ள ரூ.850 பட்டுவாடா செய்யப்படவில்லை.

    இந்த வகையில் ரூ.24 கோடி நிலுவைத்தொகை உள்ளது. இந்த நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் ஆலை நிர்வாகத்தின் சார்பில் நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை.

    இதனால் நிலுவைத்தொகை வழங்காத ஆலை நிர்வாகத்தை கண்டித்து ஆலை வளாகத்தில் கரும்பு விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராமசாமி தலைமையில் செயலாளர் கோவிந்தராஜ், பொதுச் செயலாளர் திருப்பதி வாண்டையார், பொருளாளர் அர்ச்சுணன் ஆகியோர் முன்னிலையில் கரும்பு விவசாயிகள் நேற்று குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை வளாகத்திற்குள் நுழைய முயன்றனர்.

    ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. நாங்கள் எந்த பிரச்சினையும் செய்யமாட்டோம். அமைதியான முறையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என போலீசாரிடம் கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர். இதை போலீசார் ஏற்க மறுத்ததுடன் ஆலை நுழைவு வாயில் கதவை பூட்டினர்.

    இதனால் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு தரையில் அமர்ந்து நிலுவைத்தொகை வழங்காத ஆலை நிர்வாகத்தை கண்டித்து பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பி கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கரும்பு விவசாயிகள் தலையில் துண்டை போட்டு நெற்றியில் நாமமும், கையில் மண்சட்டியையும் ஏந்தியிருந்தனர். கடன் தொல்லையுடன் பட்டினியால் வாழ்ந்து வருவதாக கூறி கஞ்சித்தொட்டி திறந்து கரும்பு விவசாயிகள் கஞ்சி வினியோகம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தீபாவளிக்குள் நிலுவைத்தொகையை வழங்கவில்லை என்றால் எங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தீபாவளியை கருப்பு தினமாக அனுசரிப்போம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    Next Story
    ×