search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் எடுக்கும் நிலை: அதிகாரிகள் தகவல்
    X

    புழல் ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் எடுக்கும் நிலை: அதிகாரிகள் தகவல்

    புழல் ஏரியில் தண்ணீர் மட்டம் குறைந்ததால் மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் எடுக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.
    சென்னை:

    சென்னை மாநகரில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பூண்டி, சோழவரம், புழல் (செங்குன்றம்), செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு தேவைக்கு ஏற்ப வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ஏரிகளில் வடகிழக்கு பருவமழை மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து பெறப்படும் கிருஷ்ணா நதிநீர் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை தவிர்த்து, சமீப காலமாகவே பருவமழை பொய்த்தது மற்றும் ஆந்திர மாநில அரசு ஒப்பந்தப்படி ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீரை முறையாக வழங்காதது போன்ற பல்வேறு காரணங்களால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீரை எதிர்பார்த்த அளவு தேக்கி வைக்க முடியவில்லை. தற்போது ஏரிகளின் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு உள்ளது. இன்று (நேற்று) காலை நிலவரப்படி 163 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. குறிப்பிட்ட அளவு தண்ணீர் சேமிக்கப்பட்ட உடன், சென்னைக்கு குடிநீர் வினியோகம் செய்யும் சோழவரம், புழல் ஏரிகளுக்கு திறந்துவிடப்பட உள்ளது.



    அதுவரை குறைந்த அளவே தண்ணீர் உள்ள பிற ஏரிகளில் இருந்து மோட்டார் பம்புகள் மூலம் இறைக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக புழல் ஏரியில் தண்ணீர் மட்டத்தை கணக்கிடப்படும் ‘ஜோன்ஸ் டவர்’ இருக்கும் பகுதிக்கும் கீழே தண்ணீர் மட்டம் சென்றுவிட்டதால் மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் எடுத்து வினியோகம் செய்யப்படுகிறது. இது தற்காலிக ஏற்பாடுகள் தான்.

    வடகிழக்கு பருவ மழையும் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எண்ணப்படுவதால் ஓரிரு நாட்கள் மட்டும் மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் இறைக்கப்படும். தற்போது 1.36 டி.எம்.சி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது. இது ஒரு மாதத்துக்கான தேவையை பூர்த்தி செய்ய உதவும். கிருஷ்ணா தண்ணீர் வந்தாலும், முழுமையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நாம் வடகிழக்கு பருவ மழையை தான் நம்பி இருக்க வேண்டி உள்ளது.

    பூண்டி ஏரியில் வரத்து கால்வாய் பகுதிகளில் ஒரு சில அடிப்படைப்பணிகள் நடந்து வருகிறது. பிற ஏரிகளில் மழை தண்ணீரை தேக்கிவைப்பதற்காக தூர்வாரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
    Next Story
    ×