search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணை கொன்று புதைத்த பூசாரி: 2 ஆண்டுக்கு பின் உடல் தோண்டி எடுப்பு
    X

    பெண்ணை கொன்று புதைத்த பூசாரி: 2 ஆண்டுக்கு பின் உடல் தோண்டி எடுப்பு

    தூத்துக்குடி அருகே கொடுத்த நகைகளை திருப்பி கேட்ட பெண்ணை கொன்று புதைத்த பூசாரியை போலீசார் கைது செய்தனர். பெண்ணின் உடல் 2 ஆண்டுக்கு பின் தோண்டி எடுக்கப்பட்டது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரலை அடுத்த வாழவல்லானை சேர்ந்தவர் திருமால். கூலி தொழிலாளியான இவரது மனைவி தனலட்சுமி (வயது 42). இவர்களுக்கு செண்பகராஜ்(22), சுந்தரராஜ்(18) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். செண்பகராஜ் பட்டப்படிப்பு படித்து உள்ளார். சுந்தரராஜ் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    கடந்த 8-10-2014 அன்று திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்ற தனலட்சுமி மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 2 ஆண்டுகளாகியும் தனலட்சுமி குறித்து எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் தீவிரமாக விசாரித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான தனலட்சுமி, செல்போனில் பேசிய விவரங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது அவர் உடன்குடி அருகே உள்ள கூழையன்குண்டு முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சோமசுந்தரம் என்ற சோமுவிடம்(38) அடிக்கடி செல்போனில் பேசியது தெரிய வந்தது. எனவே சோமசுந்தரத்தை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் தனலட்சுமியை தனது தோட்டத்தில் வைத்து கழுத்தை நெரித்தும், உருட்டு கட்டையால் தாக்கியும் கொலை செய்து புதைத்ததாக கூறினார். இதையடுத்து தனலட்சுமியை கொன்ற சோமசுந்தரம் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த உடன்குடி தைக்காவூரை சேர்ந்த அருண்குமார்(32) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான சோமசுந்தரம் போலீசில் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:-

    எனக்கு சொந்தமான தோட்டம் முத்து கிருஷ்ணாபுரத்தில் உள்ளது. அங்கு கருப்பசாமி கோவில் அமைத்து பூஜைகளை நடத்தி வந்தேன். பூஜைக்கு உதவியாக அருண்குமார் இருந்து வந்தார். நான் அடிக்கடி திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று வருவது வழக்கம். அப்போது அங்கு கோவிலுக்கு வந்த தனலட்சுமியிடம் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

    அவர் தன்னுடைய மூத்த மகன் செண்பகராஜூக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என்று கூறினார். உடனே நான் முத்துகிருஷ்ணாபுரத்தில் எனது தோட்டத்தில் உள்ள கருப்பசாமி கோவிலில் தங்க நகைகளை வைத்து படையல் பூஜை நடத்தினால், செண்பகராஜூக்கு நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும் என்று கூறினேன்.

    இதை நம்பிய தனலட்சுமி தனது 12 பவுன் தங்க நகைகளை கழற்றி என்னிடம் தந்தார். பின்னர் அவரிடம், உனது கணவருக்கு தெரிந்தால் நகைகளை கேட்டு தொந்தரவு செய்வார், எனவே கணவருக்கு தெரியாமல் கவரிங் நகைகளை அணிந்து கொள் என்று கூறினேன். இதனை தொடர்ந்து தனலட்சுமியும் கவரிங் நகைகளை அணிந்து கொண்டார்.

    இந்த நிலையில் செண்பகராஜூக்கு சரியான வேலை கிடைக்காததால், அவரை உயர்படிப்பு படிக்க வைக்க திருமால் திட்டமிட்டார். எனவே அவர் மகனின் படிப்பு செலவுக்கு நகைகளை அடகு வைக்க தருமாறு தனலட்சுமியிடம் கேட்டார். இதையடுத்து கடந்த 8-10-2014 அன்று தனலட்சுமி என்னிடம் தங்க நகைகளை திருப்பி தருமாறு கேட்டார்.

    உடனே எனது தோட்டத்தில் உள்ள கோவிலுக்கு வந்து படையல் பூஜையில் உள்ள நகைகளை வாங்கி செல்லுமாறு கூறினேன். இதனை உண்மை என்று நம்பிய தனலட்சுமி தனியாக கோவிலுக்கு வந்தார்.

    அப்போது நான் நைசாக தனலட்சுமியின் பின்பக்கமாக சென்று அவரது கழுத்தை கயிற்றால் நெரித்தேன்.

    பின்னர் உருட்டு கட்டையால் அவரது தலையில் சரமாரியாக அடித்து கொலை செய்து என்னுடைய தோட்டத்திலேயே உடலை புதைத்தேன்.

    நான் கொலை செய்ததை அருண்குமாரும் பார்த்தார். அவரிடம் கொலைகுறித்து யாரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம் என்று கூறினேன். இந்த நிலையில் போலீசார் எனது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு சோமசுந்தரம் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

    சோமசுந்தரத்தை போலீசார் அவரது தோட்டத்துக்கு அழைத்து சென்று கொலை செய்யப்பட்ட தனலெட்சுமியின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் மனோகரன், தடயவியல் நிபுணர் விஜயலதா உள்ளிட்ட குழுவினர் தனலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்து அங்கேயே புதைத்தனர்.

    கைதான சோமசுந்தரம், அருண்குமார் ஆகிய 2 இருவரையும் போலீசார் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×