search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி பிரச்சினையில் ஒன்று சேராத தமிழக அரசியல் கட்சிகள் - குழம்பி தவிக்கும் மக்கள் நலக்கூட்டணி
    X

    காவிரி பிரச்சினையில் ஒன்று சேராத தமிழக அரசியல் கட்சிகள் - குழம்பி தவிக்கும் மக்கள் நலக்கூட்டணி

    காவிரி பிரச்சினை தொடர்பாக தி.மு.க. ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்காக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுசேராத நிலையில், முக்கிய கட்சிகள் பங்கேற்கவில்லை.
    சென்னை:

    காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற வேண்டும் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் நிரந்தர தீர்வு என்று தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் கூறி வருகின்றனர்.

    இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று மத்திய அரசு கூறிவிட்டது.

    இதனையடுத்து காவிரி நீர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக 2 நாட்கள் ரெயில் மறியல் போராட்டமும் நடந்தது. இதில் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தனித் தனியாக கலந்து கொண்டது.

    மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஒன்று சேர்ந்து ரெயில் மறியலை நடத்தினர்.

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிரச்சினையில் பாகுபாடு இல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ளன. இதுபோன்ற நிலை தமிழகத்தில் ஏற்படாமல் இருந்தது.

    இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் காவிரி பிரச்சினையில் ஒன்று சேர்க்க எதிர்க்கட்சியான தி.மு.க. முடிவு செய்தது.

    இதன்படி எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். இது தொடர்பாக அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அவர் கடிதம் எழுதினார். மு.க.ஸ்டாலினின் இந்த அழைப்பை ஏற்று காங்கிரஸ், த.மா.கா உள்ளிட்ட 16 கட்சிகள் இன்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டன.

    மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரான தொல்.திருமாவளவன், காவிரி பிரச்சினை தொடர்பாக தி.மு.க. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினால் அதில் விடுதலை சிறுத்தைகளும் பங்கேற்கும் என்று ஏற்கனவே கூறி இருந்தார். இதனால் ஸ்டாலின் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் திருமாவளவன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் மக்கள் நலக் கூட்டணியோ அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்து திருமாவளவன் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் விருப்பமாக உள்ளது. இதுபற்றி ஆலோசித்து முடிவை அறிவிப்போம் என்று கூறினார்.

    இது தொடர்பாக தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை நேற்று நள்ளிரவில் சந்தித்து 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில் இன்று காலையில் தனது முடிவை திருமாவளவன் அறிவித்தார். அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்று திருமாவளவன், மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டார்.

    மக்கள் நலக்கூட்டணியில் உள்ள ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளும் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ளன.

    காவிரி பிரச்சினையில், மு.க.ஸ்டாலின் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக வைகோ, திருமாவளவன் ஆகியோரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 நாட்களாக மக்கள் நலக் கூட்டணியில் குழப்பம் நீடித்து வந்தது. திருமாவளவனின் அறிவிப்புக்கு பின்னரே அது விலகியது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.

    மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ள இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், தே.மு.தி.க. பா.ம.க.வும் பங்கேற்கவில்லை.

    சமத்துவ மக்கள் கட்சி, பா.ஜனதா மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி, வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சி, தி.மு.க. கூட்டணி கட்சியான புதிய தமிழகம் ஆகியவையும் கலந்து கொள்ளவில்லை.

    இதன் மூலம் காவிரி பிரச்சினையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ஒன்று சேராமல் தனித்தே களம் காணும் நிலையே உள்ளது.

    அரசியல் வேறுபாடுகளை மறந்து காவிரி பிரச்சினையில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்திருந்தால் அது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்தது போல இருந்திருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×