search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திரையரங்குகளில் நுழைவு கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து: ஐகோர்ட்டு உத்தரவு
    X

    திரையரங்குகளில் நுழைவு கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து: ஐகோர்ட்டு உத்தரவு

    திரையரங்குகளில் நுழைவு கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    திரையரங்குகளில் நுழைவு கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம். இவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திரையங்குகளில் நுழைவு கட்டணத்தை அதிகரிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்து வருகிறோம். கடந்த 2006-ம் ஆண்டுக்கு பின்னர், திரையரங்கு நுழைவு கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. இதனால், நஷ்டத்தில் பல திரையரங்குகள் இழுத்து மூடப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் 2000-ம் ஆண்டு 2 ஆயிரத்து 339 திரையரங்குகள் இருந்தன. இது 2014-ம் ஆண்டு 995 ஆக குறைந்துவிட்டன. திரையரங்குகளுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரி 100 சதவீதம் அதிகரித்துள்ளது. முன்பு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.3.50 இருந்தது. தற்போது, ஒரு யூனிட் ரூ.7 ஆக உயர்ந்துள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படியும், சம்பளமும் பெருமளவு அதிகரித்துள்ளது.

    ஆனால், திரையரங்கு நுழைவு கட்டணம் மட்டும் கடந்த 2006-ம் ஆண்டுக்கு பின்னர் அதிகரிக்கவே இல்லை. இதனால் இந்த செலவுகளை ஈடுகட்டுவதற்காக திரையரங்குகளின் நுழைவுக் கட்டணத்தை உயர்த்தக்கோரி கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை தமிழக அரசுக்கு 15 முறை மனுகொடுத்துள்ளோம்.

    இறுதியாக 2013-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி கட்டணத்தை மாற்றியமைக்கக் கோரி மனு கொடுத்துள்ளோம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, எங்களது கோரிக்கையை 8 வாரத்திற்குள் பரிசீலிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்பின்னரும் எந்த உத்தரவையும் தமிழக அரசு பிறப்பிக்கவில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா கடந்த 21-ந்தேதி பிறப்பித்த அரசாணை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த அரசாணையில், சென்னையில் குளுகுளு வசதிகொண்ட திரையரங்குகளில் அதிகபட்சம் கட்டணம் ரூ.150, குறைந்தபட்சம் கட்டணம் ரூ.35 என்றும் குளுகுளு வசதி இல்லாத திரையரங்குகளில் அதிகபட்சம் கட்டணம் ரூ.100, குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 என்றும் நிர்ணயிக்கப்படுகிறது. பிற நகரங்களில், குளுகுளு வசதிகொண்ட திரையரங்குகளில் அதிபட்சம் ரூ.100, குறைந்தபட்சம் ரூ.25, குளுகுளு வசதியில்லாத திரையரங்குகளில் அதிகபட்சம் ரூ.80, குறைந்தபட்சம் ரூ.20 என்றும் நிர்ணயிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த அரசாணையை படித்து பார்த்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    மனுதாரர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கட்டணத்தை உயர்த்தவேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். அதில் மின்சார கட்டண உயர்வு, ஊழியர்கள் சம்பள உயர்வு, கேளிக்கை வரி உயர்வு ஆகியவற்றை குறித்தும் கூறியுள்ளனர். அவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, தமிழக அரசு தற்போது கட்டணத்தை உயர்த்தி பிறப்பித்த உத்தரவு எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே, அந்த அரசாணையை ரத்து செய்கிறோம். மனுதாரர்களின் கோரிக்கையின் அடிப்படையில், தமிழக அரசு கட்டணம் உயர்த்துவது குறித்து மீண்டும் பரிசீலித்து, தகுந்த உத்தரவினை பிறப்பிக்கவேண்டும். இந்த வழக்கை பைசல் செய்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    Next Story
    ×