search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காந்தி ஆசிர்வாதத்தை பெற மதுவை ஒழிக்க வேண்டும்: குமரி அனந்தன் பேச்சு
    X

    காந்தி ஆசிர்வாதத்தை பெற மதுவை ஒழிக்க வேண்டும்: குமரி அனந்தன் பேச்சு

    காந்தி தீண்டாமையையும், மதுவையும் ஒழித்தால் மட்டுமே எனது ஆசிர்வாதத்தை பெறமுடியும் என்றார். இன்று அவரது ஆசிர்வாதத்தை இந்தியா பெறவில்லை என்பது வேதனைக்குறியது என்று குமரி அனந்தன் பேசினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை சார்பில் நாமக்கல் கவிஞர் பிறந்த நாள் விழா, டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா மற்றும் விருதுகள் வழங்கும் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    நாமக்கல் நகைச்சுவை மன்ற தலைவர் டாக்டர் ஆர்.குழந்தைவேலு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை தலைவர் டி.எம்.மோகன் அனைவரையும் வரவேற்றார்.

    விழாவில் முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரும், காந்தீய பேரவை தலைவருமான குமரி அனந்தன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    மறைந்த மகாத்மா காந்தி , ஜீவானந்தம் போன்ற தியாகிகள் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவர்கள். ஜீவானந்தத்தின் தாய் இறந்த பின் குளிக்க வேண்டும் . அவரிடம் வேறு கதர் சட்டை இல்லாதததால் அவர் குளிப்பதையே தவிர்த்தவர். கைத்தறிக்கு அதிக அளவில் தியாகிகள் முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் இன்று கை ராட்டையை பார்க்கவே எளிதாகி விட்டது. அன்று காந்தி கை குத்தல் அரிசியை தான் சாப்பிடுவார். அதில் தான் அதிக சத்து உள்ளது. எனவே கைகுத்தல் அரிசி உணவை சாப்பிட அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

    காந்தி தீண்டாமையையும், மதுவையும் ஒழித்தால் மட்டுமே எனது ஆசிர்வாதத்தை பெறமுடியும் என்றார். இன்று அவரது ஆசிர்வாதத்தை இந்தியா பெறவில்லை என்பது வேதனைக்குறியது.

    மதுவை ஒழிக்க 500 தென்னை மரங்களை வெட்டியவர் ஈ.வெ.ரா பெரியார். மது விற்று தான் கல்வி கூடங்கள் நடத்துவேண்டும் என்றால் அந்த கல்வி கூடங்களையே மூடிவிடலாம் என்று கூறியவர் மகாத்மா காந்தி. ஆனால் இன்று காந்தி படம் உள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்து மது வாங்கி குடிக்கின்றனர். அதுவும் மாணவர்கள் மது அருந்தி விட்டு செல்வது வேதனைக்குறியது . மதுவை ஒழித்து, கோவில்களில் தமிழை வழிபாட்டு மொழியாக கொண்டு வந்து, கதர் ஆடையை உடுத்த வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனையடுத்து நாமக்கல் கவிஞர் பேரன் இரா.அ.பழனியப்பன், திரைப்பட எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் நாமக்கல் கவிஞரை குறித்து சிறப்புரையாற்றினர். இவ்விழாவில் செல்வம் கல்வி நிறுவனங்கள் தலைவர் டாக்டர் ஆர்.செல்வராஜ், கம்பன் கழக செயலாளர் அரசுபரமேசுவரன், நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை செயலாளர் செல்வ.செந்தில்குமார், நாமக்கல் தமிழ்ச்சங்க செயலாளர் கோபால.நாராயணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×