search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லியில் தீபாவளி சிறப்பு பஸ்களுக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
    X

    கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லியில் தீபாவளி சிறப்பு பஸ்களுக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

    கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லியில் தீபாவளி சிறப்பு பஸ்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக 29 சிறப்பு கவுண்டர்கள் இன்று திறக்கப்பட்டன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக தமிழக அரசு சிறப்பு பஸ்களை அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து 3 நாட்களுக்கு 11,225 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    26-ந்தேதி, 3,254 பஸ்கள், 27-ந்தேதி 3992, 28-ந்தேதி 3979 சிறப்பு பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்து 64 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சிறப்பு பஸ்கள் பொது மக்கள் வசதிக்காக தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம், சானடோரியம் (ஏம்பஸ்), பூந்தமல்லி, அண்ணாநகர், மேற்கு பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், 100 அடி சாலையில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் அலுவலகம் அருகில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க அனைத்து ஏற்பாடுகளையும் போக்குவரத்து கழகம் செய்துள்ளது.

    நாளை மறுநாளில் (26-ந்தேதி) இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பஸ்களுக்கு முன் பதிவு இன்று தொடங்கியது. 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக செல்லக் கூடிய பஸ்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    அதற்கு குறைவாக உள்ள பகுதிகளுக்கு முன்பதிவு செய்ய தேவையில்லை. பயணம் செய்யக் கூடிய நாளில் பஸ் நிலையங்களுக்கு சென்றால் டோக்கன் முறையில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். முன்பதிவு செய்வதற்காக 29 சிறப்பு கவுண்டர்கள் இன்று திறக்கப்பட்டன. கோயம்பேடு பஸ் நிலையத்தில் 26 சிறப்பு கவுண்டர்களும், தாம்பரம் சாணடோரியத்தில் 2 கவுண்டர்களும், பூந்தமல்லியில் ஒரு கவுண்டரும் திறக்கப்பட்டது. காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பொது மக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இதுகுறித்து போக்கு வரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தீபாவளி சிறப்பு பஸ்களுக்கு இன்று முன்பதிவு தொடங்கியுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம் ஒரு ரூபாய் செலுத்தி பெற வேண்டும். முன்பதிவு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூடுதலாக 26 கவுண் டர்கள் திறக்கப்பட்டுள்ளது.

    மேலும் wwwtnstc.in என்ற இணையதளத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு பஸ் நிறுத்தம் மாற்றம் குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×