search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளியை முன்னிட்டு தியாகராயநகரில் அலைமோதிய மக்கள் கூட்டம்
    X

    தீபாவளியை முன்னிட்டு தியாகராயநகரில் அலைமோதிய மக்கள் கூட்டம்

    தீபாவளியை முன்னிட்டு தியாகராயநகரில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை பகுதிகளிலும் விற்பனை அமோகமாக நடந்தது.
    சென்னை:

    தீபாவளி பண்டிகை 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை தியாகராயநகர் ரெங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளிக்கடைகளில் புத்தாடை வாங்குவதற்கும் மற்றும் அங்குள்ள கடைகளில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கும் கடந்த சில நாட்களாக மக்கள் அதிக அளவில் வந்து சென்றனர்.

    தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று தியாகராயநகரில் உள்ள ரெங்கநாதன் தெரு, பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதே போல் புரசைவாக்கம், பிராட்வே, வண்ணாரப்பேட்டை பகுதிகளிலும் மக்கள் அதிக அளவில் பொருட்கள் வாங்க குவிந்தனர்.

    சென்னை தியாகராயநகரில் மக்கள் கூட்டத்தின் மத்தியில் பிக்பாக்கெட், சங்கிலி பறிப்பு, கவனத்தை திசை திருப்பி திருடுதல் போன்றவற்றை தடுக்கும் வகையில் பாதுகாப்பு வழங்க 400 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 100 போலீசார் சாதாரண உடையில் மக்களோடு மக்களாக திருடர்களை கண்காணிக்கின்றனர்.

    இதுதவிர விழிப்புணர்வு பதாகைகள், ஒலிப்பெருக்கி மூலமாகவும் மக்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. கண்காணிப்பு கோபுரம் அமைத்து அதன் மூலம் திருடர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சில நாட்களாக ஓரளவு மக்கள் கூட்டம் காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நேற்று இங்கும் அதிக அளவில் மக்கள் குவிந்தனர். இதனால் விற்பனை களைகட்டியது.

    இது குறித்து சென்னை பட்டாசு கடைகள் நலச்சங்க இணை செயலாளர் நவுரங் அப்துல் ரகுமான் கூறியதாவது:-

    தீவுத்திடலில் மொத்தம் 58 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மழை வந்தாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் கடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு கார், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு கருதி தீயணைப்பு படையினர், ஆயுதப்படை போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த ஆண்டு புதிய வரவாக ‘ஏ-ஒன் சூப்பர் சாட்’ என்ற பட்டாசு வந்துள்ளது. இது 25 முதல் 30 நிமிடம் வெடித்துக்கொண்டே இருக்கும். மேலும் குழந்தைகளை மகிழ்விக்க ‘லேசர்’ துப்பாக்கி விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இது தவிர 12 வகையான ‘ஸ்கை சாட்’டுகள் புதிய வரவாக வந்துள்ளன. 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பட்டாசுகள் வாங்குபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.

    இன்னும் ஓரிரு நாட்களில் பட்டாசு விற்பனை உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு மழை இல்லாதது எங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×