search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாண்புமிகு கவர்னர் என்றே அழைக்க வேண்டும்: கவர்னர் மாளிகை அறிவிப்பு
    X

    மாண்புமிகு கவர்னர் என்றே அழைக்க வேண்டும்: கவர்னர் மாளிகை அறிவிப்பு

    மேதகு வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என்றும், மாண்புமிகு கவர்னர் என்றே அழைக்க வேண்டும் என்றும் கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.
    சென்னை:

    இந்தியாவின் முதல் குடிமகன் என்று அழைக்கப்படும் ஜனாதிபதியையும், அவரது பிரதிநிதிகளாக கருதப்படும் மாநில கவர்னர்களையும் அழைக்கும்போது, மரியாதைக்காக பெயருக்கு முன்னால் ‘மேதகு’ என்ற வார்த்தையை சேர்த்து அழைப்பது வழக்கம். இதேபோல், பிரதமர், மாநில முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள் ஆகியோரை ‘மாண்புமிகு’ என்று பெயருக்கு முன்னால் சேர்த்து அழைப்பது வழக்கம்.

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே இந்த நடைமுறை இருந்து வந்தது. ஆனால், இதில் ‘மேதகு’ என்ற வார்த்தையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருக்கிறது. இதற்கிடையே, கடந்த 2012-ம் ஆண்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இதற்கு முற்றுப்புள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    அவர் பிறப்பித்த உத்தரவில், “ஜனாதிபதி, கவர்னர் உள்ளிட்ட உயர் பதவி வகிப்போரை மேதகு என்ற வார்த்தையால் அழைப்பது வழக்கம். இனி இந்த வார்த்தையை உள்நாட்டு நிகழ்ச்சிகளிலோ, உள்நாட்டு தலைவர்களுடனான சந்திப்புகளின்போதோ பயன்படுத்தக்கூடாது. இத்தகைய நிகழ்ச்சிகளில், ‘மாண்புமிகு’ என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும். இருப்பினும், ‘மேதகு’ என்ற வார்த்தையை வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்பின்போது மட்டும் பயன்படுத்தலாம்” என்று கூறப்பட்டிருந்தது.

    தற்போது, இதே உத்தரவை தமிழக கவர்னர் மாளிகை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக, தமிழக கவர்னர் மாளிகையில் இருந்து நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அரசு விழாக்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களில் கவர்னரை மரியாதையுடன் அழைக்க பயன்படுத்தப்பட்டு வரும் மேதகு கவர்னர் என்ற வார்த்தையை இனி பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக, மாண்புமிகு கவர்னர் என்ற வார்த்தையை அடைமொழியாக பயன்படுத்தும்படி, கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிவுறுத்தியுள்ளார்.

    அதே நேரத்தில், அயல்நாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது, மேதகு என்ற அடைமொழி தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×