search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதாவை பார்க்க வந்த கவர்னர்: உடல்நலம் பற்றி கேட்டறிந்தார்
    X

    ஜெயலலிதாவை பார்க்க வந்த கவர்னர்: உடல்நலம் பற்றி கேட்டறிந்தார்

    அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் உடல்நலம் பற்றி அறிந்துகொள்ள கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று இரண்டாவது முறையாக அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். முதல்-அமைச்சர் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவர் டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இன்று (சனிக்கிழமை) அவருக்கு டாக்டர்கள் 31-வது நாளாக தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இதயச் சிகிச்சை நிபுணர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர்கள், செயற்கை சுவாச சிகிச்சை நிபுணர்கள், சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர்கள், நோய்த் தொற்று சிகிச்சை நிபுணர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த கண்காணிப்பால் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் கடந்த 3 தினங்களாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. லண்டன் டாக்டர் ரிச்சர்டு மற்றும் எய்ம்ஸ் டாக்டர்களின் ஆலோசனையும் பயன் அளித்துள்ளது.

    இதற்கிடையே ஆன்டிபயாடிக்கை குறைத்து சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 பெண் பிசியோதெரபிஸ்ட் மூலம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையை சீரான நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

    தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் கடந்த 1-ந்தேதி அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பற்றி கேட்டு அறிந்தார். பிறகு அவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசம் இருந்த பொறுப்புகளை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்குப் பிறகு கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று இரண்டாவது முறையாக அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவர் டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.

    கவர்னர் வித்யாசாகர் ராவ் 11.25 மணி முதல் 11.55 மணி வரை சுமார் 30 நிமிடங்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தார். டாக்டர்கள் அளித்த தகவல்கள் அனைத்தையும் கேட்ட பிறகு மதியம் 12 மணிக்கு அவர் காரில் ஏறி புறப்பட்டார்.

    அப்போது கவர்னர் வித்யாசாகர் ராவிடம் நிருபர்கள் பேட்டி காண முயன்றனர். ஆனால் கவர்னர் எதுவும் சொல்லாமல் சென்று விட்டார்.

    கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்ற சிறிது நேரத்தில் மத்திய இணை மந்திரி ஒய்.எஸ். சவுத்திரி, தெலுங்கானா மாநில எம்.பி. ரமேஷ் மருத்துவமனைக்கு வந்தனர். ஆஸ்பத்திரி இரண்டாம் தளத்துக்கு சென்ற அவர்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்தனர்.

    அதுபோல கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதய ராஜ் தலைமையில் தமிழ்நாடு ஆயர் பேரவைத் தலைவர் டாக்டர் அந்தோணி பாபுசாமி, சென்னை மயிலை உயர் மறைமலை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா, தென் இந்திய திருச்சபையைச் சேர்ந்த தேவசகாயம், போதகர் பால் தயானந்த் உள்பட 25 திருச்சபை ஆயர்கள், பேராயர்கள் இன்று அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பற்றி விசாரித்தனர்.

    Next Story
    ×