search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
    X

    தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    அந்தமான் அருகே வங்க கடலில் குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாகவும், அது அடுத்த 2 நாட்களில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    சென்னை:

    அந்தமான் அருகே வங்க கடலில் குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாகவும், அது அடுத்த 2 நாட்களில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

    மத்திய மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு வடமேற்கே 500 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணிநேரத்தில் (2 நாட்களில்) புயலாக மாறி வடகிழக்கு திசையில் மியான்மர் நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்பு இருக்கிறது.

    இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

    இருப்பினும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று (சனிக்கிழமை) மழை பெய்யும்.

    இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மறைந்த பின்னர்தான் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முடிவடையும். 27-ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை.

    இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி, திருப்பூர் மாவட்டம் முலனூர் தலா 8 செ.மீ., ஈரோடு, குமாரபாளையம் தலா 7 செ.மீ., திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், வேடசந்தூர், காங்கேயம், பேரையூர் தலா 5 செ.மீ., பவானி, திருப்பூர், சேலம் மாவட்டம் ஆத்தூர், ராமேசுவரம், தக்கலை, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி தலா 4 செ.மீ., அம்பாசமுத்திரம், உத்தமபாளையம், திண்டுக்கல், தர்மபுரி தலா 3 செ.மீ. மழை பெய்து உள்ளது. மேலும் 2 செ.மீ.மழை 10-க்கும் மேற்பட்ட இடங்களிலும், 1 செ.மீ.மழை 15-க்கும் மேற்பட்ட இடங்களிலும் பதிவாகி உள்ளது. 
    Next Story
    ×