search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
    X

    நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

    நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 280 பேர் பலியானார்கள். செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு இன்றி திறந்து விட்டதே இதற்கு காரணம் எனக்கூறி சென்னை ஐகோர்ட்டில் பலர் பொதுநல வழக்குகளை தொடர்ந்தனர்.

    இந்த வழக்குகள் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் நிலுவையில் உள்ளன. கடந்த முறை இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு ஒரு ஆலோசனை குழுவை அமைத்து இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குழுவை தமிழக அரசு அமைக்கவில்லை என்றால் ஐகோர்ட்டே அமைக்கும் என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ‘பேரிடர் மேலாண்மை ஆலோசனை குழுவை அமைத்து கடந்த 18-ந் தேதி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது’ என்று கூறி அதனை தாக்கல் செய்தார்.

    இந்த குழுவின் தலைவராக வருவாய் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் கே.சத்யபால், துணைத்தலைவராக வருவாய் செயலாளர் பி.சந்திரமோகன் ஆகியோர் செயல்படுவார்கள். அண்ணா பல்கலைக்கழக பேரிடர் மீட்பு மற்றும் மேலாண்மை மையத்தின் பேராசிரியர் திருமலைவாசன் உள்பட 18 பேர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என்று அட்வகேட் ஜெனரல் கூறினார்.

    சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு காரணம் பல இருந்தாலும், முக்கியமானது நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் தான். இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறதா? என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அட்வகேட் ஜெரனல், இந்த பணியை அதிகாரிகள் துரிதமாக செய்து வருவதாக கூறினார்.

    அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், பேரிடர் மேலாண்மை ஆலோசனைக்குழுவின் கூட்டத்தை விரைவில் நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து இப்போதும் பலர் கட்டிடம் கட்டுகின்றனர் என்று கூறி இதுதொடர்பான புகைப்படங் களை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

    நீதிபதிகள், இதுகுறித்து அட்வகேட் ஜெனரலிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு அவர் அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு அமைத்துள்ள, பேரிடர் மேலாண்மை ஆலோசனை கூட்டத்தை ஒரு வாரத்துக்குள் கூட்டவேண்டும் என்று அரசுக்கு உத்தரவிடுகிறோம். பக்கிங்காம் கால்வாயில் கட்டிடங்கள் கட்டப்படுவது குறித்து தமிழக அரசு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். வழக்கு விசாரணையை நவம்பர் 15-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    முன்னதாக வக்கீல் வி.பி.ஆர். மேனன் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள், நீர்நிலைகளை பராமரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐகோர்ட்டு உத்தரவிட்டும், அதை முறையாக பின்பற்றவில்லை என்று கண்டனம் தெரிவித்தனர்.

    இந்த பணியை மேற்கொள்ள அரசு காலதாமதம் செய்தால், நீர்நிலைகளில் உள்ள களிமண் மற்றும் ஆற்றுப்படுகை மணலை பொதுமக்கள் இலவசமாக அள்ளிக்கொள்ள அனுமதிக்கவேண்டும் என்று வக்கீல் மேனன் வாதிட்டார். இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.

    தூர்வாரும் பணிகளை தமிழக அரசு முடிக்கும்வரை பருவமழை காத்திருக்காது. இந்த பணிகளை விரைவாக மேற்கொண்டு அதுதொடர்பான அறிக்கையை நவம்பர் 15-ந் தேதி தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.

    Next Story
    ×