search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளிக்காக ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்த்தப்படவில்லை: தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
    X

    தீபாவளிக்காக ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்த்தப்படவில்லை: தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

    தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொருளாளர் மாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆம்னி பஸ்களில் தீபாவளிக்காக எந்தவித கட்டணமும் உயர்த்தப்படவில்லை. ஏற்கனவே உள்ள கட்டணம் தான் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தீபாவளி, பொங்கல் பண்டிகை மற்றும் விசே‌ஷ விடுமுறை காலங்களில் ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாகிவிட்டது. அவரவர் இஷ்டம் போல் கட்டணத்தை நிர்ணயித்து கொண்டு வசூலிப்பதாக பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    போக்குவரத்து துறை அவ்வப்போது சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்தாலும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.

    இந்த நிலையில் அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தீபாவளியை முன்னிட்டு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் சென்னையில் இருந்து எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற விவரத்தை அந்த சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

    இதற்கு தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொருளாளர் மாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆம்னி பஸ்களில் தீபாவளிக்காக எந்தவித கட்டணமும் உயர்த்தப்படவில்லை. ஏற்கனவே உள்ள கட்டணம் தான் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    தீபாவளிக்காக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அறிவித்து பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க ஒரு சில பஸ் ஆபரேட்டர்கள் திட்டமிட்டுள்ளனர். இவர்கள் தினமும் ஆம்னி பஸ்களை தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு இயக்குபவர்கள் அல்ல. சுற்றுலா பஸ்களை இயக்க கூடியவர்கள். வார இறுதியில் (வெள்ளி, ஞாயிறு) கூட்டத்தை அறிந்து அதற்கேற்றவாறு பஸ்களை இயக்க கூடியவர்கள். இவர்கள் ஆம்னி பஸ்கள் என்ற பெயரில் மக்களை குழப்பி அதிக கட்டணம் வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களை முறைப்படுத்த வேண்டும் என்று நாங்கள் போக்குவரத்து துறைக்கு மனு கொடுத்துள்ளோம். இவர்களின் செயலால் தான் ஒட்டு மொத்த ஆம்னி பஸ் ஆபரேட்டர்களுக்கும் மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

    எங்கள் சங்கத்தில் 170 ஆம்னி பஸ் உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். எங்களின் 2000 ஆம்னி பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு தினமும் சென்று வருகின்றன. இதில் நியாயமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு முறைப்படி வசூலிக்கப்படுகிறது.

    இந்த கட்டண விவரங்கள் ஒவ்வொரு ஆம்னி நிறுவன வெப்சைட்டிலும் வெளியிடப்பட்டுள்ளது. நேரத்திற்கு ஏற்ப, சூழ்நிலைக்கேற்ப கட்டணத்தை கூட்டி, குறைத்து வசூலிப்பது இல்லை.

    இந்த சங்கத்தில் பர்வின், கே.பி.என்., எஸ்.ஆர்.எம்., எஸ்.ஆர்.எஸ்., அமர்நாத், எம்.எஸ்.எஸ்., திருமால் அழகு, ஜாய், அஜித், விவேகம், திப்புசுல்தான், ஸ்ரீபாக்கியலட்சுமி, மதுரை ராதா, மேட்டூர் சூப்பர் சர்வீஸ், நாராயணமூர்த்தி, கே.கே.ஆர். உள்ளிட்ட பல ஆம்னி பஸ் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

    ஆம்னி பஸ்களில் வழக்கமாக செல்லும் ஒவ்வொரு பயணிகளுக்கும் எங்கள் சங்க பஸ் பற்றிய முழு விவரங்கள் தெரியும். ஆனால் ஒன்று அல்லது 2 பஸ்களை வைத்து கொண்டு ஆம்னி பஸ் என்ற பெயரில் பொது மக்களிடம் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதை அரசுதான் தடுக்க வேண்டும்.

    பகிரங்கமாக கட்டண உயர்வு என்று அறிவித்து தீபாவளி வசூலில் ஈடுபடும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×