search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திறன்மேம்பாட்டு பயிற்சி பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்: கேரள கவர்னர் எஸ்.சதாசிவம் பேச்சு
    X

    திறன்மேம்பாட்டு பயிற்சி பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்: கேரள கவர்னர் எஸ்.சதாசிவம் பேச்சு

    ‘டிடி நெக்ஸ்ட்’ தயாரித்த ‘தமிழக கல்வியாளர்கள்’ புத்தக வெளியீட்டு விழாவில், இந்தியாவில் திறன்மேம்பாட்டு பயிற்சிகள் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று கேரள மாநில கவர்னர் எஸ்.சதாசிவம் கூறினார்.
    சென்னை:

    தினத்தந்தியின் ஆங்கிலப்பதிப்பான ‘டிடி நெக்ஸ்ட்’ பத்திரிகை மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (அசோசெமின்) சார்பில் ‘திறன்மேம்பாடு கருத்தரங்கம்’ மற்றும் ‘தமிழக கல்வியாளர்கள்’ கையேடு புத்தகம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. ‘டிடி நெக்ஸ்ட்’ தலைமை நிர்வாக அதிகாரி நைனன் தரியன் தலைமை தாங்கினார். ‘தமிழகத்தில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்கள்’ என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட ‘காபி டேபிள் புத்தகத்தை’ கேரள மாநில கவர்னரும், சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியுமான எஸ்.சதாசிவம் வெளியிட்டார். வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் தென்மண்டலத்தின் உபத்தலைவரும், சுரணா ஆண்டு சுரணா அகில உலக அட்டார்னீஸ் தலைமை நிர்வாக அதிகாரி வினோத் சுரணா பெற்றுக்கொண்டார்.

    திருச்செந்தூரில் உள்ள சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, வேலூர் வி.ஐ.டி., பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள சத்திய பாமா பல்கலைக்கழகம் உள்ளிட்ட புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் அந்த புத்தகத்தில் இடம் பெற்றிருந்தன. இந்த பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளை சேர்ந்தவர்களுக்கு ‘காபிடேபிள்’ புத்தகங்களை கவர்னர் சதாசிவம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கவர்னர் எஸ்.சதாசிவம் பேசியதாவது:-

    விவசாயி ஒருவரின் மகன் என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றி கொண்டிருந்த போது, நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வெங்காயம் விலை உயர்வு ஏற்பட்டது. இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்களும் நடந்தன. உடனடியாக நிதித்துறை அமைச்சகத்திடம் பேசி அண்டைநாடுகளில் இருந்து கப்பலில் இறக்குமதி செய்யப்பட்டு வெங்காயம் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டது.

    இந்த பிரச்சினைக்கு மறுபக்கம் பார்த்தால் சீசன் காலங்களில் வெங்காயம் விலை ரூ.3 முதல் ரூ.5-க்கும் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அப்போது விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். விவசாயிகள் நலன் கருதி நாடு முழுவதும் சிறிய அளவில் குளிர்பதன கிடங்குகளை அமைத்து கொடுத்தால் நல்ல விலை கிடைக்கும் போது விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்து வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்வார்கள் என்ற யோசனையை பிரதமரிடம் கூறினேன். அவரும் கனிவாக கேட்டு அதற்கான நடவடிக்கையையும் எடுத்தார்.

    கேரள மாநிலத்தில் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சிறந்த பல்கலைக்கழகம் மற்றும் துணைவேந்தர்கள் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர். அகில இந்திய அளவில் கவர்னர்கள் கூட்டங்களிலும் இதனை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டது. கல்வி கற்பிப்பதுடன், வேலைவாய்ப்பை பெற்று தருவதிலும் கல்வி நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு முறையான பயிற்சியை பெற வேண்டும். நாடு முழுவதும் 45 கோடி பேர் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். அவர்களில் 5 சதவீதத்துக்கும் குறைவானவர்களே திறன்மேம்பாட்டு பயிற்சியை பெற்று உள்ளனர். ஆனால் தென்கொரியாவில் 96 சதவீதம் பேரும், ஜப்பானில் 80 சதவீதம் பேரும் திறன்மேம்பாட்டு பயிற்சியை பெற்று பணிகளில் சேருகின்றனர்.

    சீனாவில் 5 லட்சத்துக்கும் மேல் திறன்மேம்பாட்டு பயிற்சி நிலையங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவில் சில ஆயிரங்கள் மட்டுமே பயிற்சி நிலையங்கள் உள்ளன. இந்தியாவில் திறன்மேம்பாட்டு பயிற்சியை முறையாக அளிப்பதன் மூலம் அவை சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். இவ்வாறு கேரள கவர்னர் எஸ்.சதாசிவம் பேசினார். முன்னதாக தென்மண்டல உபத்தலைவர் வினோத் சுரணா வரவேற்றார். எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி முதல்வர் சாலிவாகனன் நன்றி கூறினார்.
    Next Story
    ×