search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவண்ணாரப்பேட்டையில் துப்பாக்கி முனையில் 4 ரவுடிகள் கைது
    X

    புதுவண்ணாரப்பேட்டையில் துப்பாக்கி முனையில் 4 ரவுடிகள் கைது

    புதுவண்ணாரப்பேட்டையில் பட்டாகத்தி, வீச்சு அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய 4 ரவுடிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவகர் நேற்று மாலை ஸ்டான்லி மருத்துவமனை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    அப்போது ஒரு வாலிபர் போலீசை பார்த்ததும் ஓடினார். போலீசார் அவரை துரத்தி சென்றனர். அவர் ஸ்டான்லி மருத்துவமனை பாலத்தில் மேலே ஓடினார். பின்னர் போலீசில் இருந்து தப்பிப்பதற்காக பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது கால் முறிந்தது. உடனே போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    விசாரணையில் புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்த யுவராஜ் (25) ரவுடி என்பதும் 2014-ல் இ.சி.ஆர். சாலையில் நடந்த காமேஷ் கொலை வழக்கு உள்பட 4 கொலை வழக்குகள் இவர் மீது உள்ளது என்பது தெரிய வந்தது. இவர் கல்வெட்டு ரவியின் கூட்டாளி ஆவார்.

    தொடர்ந்து யுவராஜிடம் நடந்த விசாரணையில் அவனது கூட்டாளிகள் 4 பேர் புதுவண்ணாரப்பேட்டையில் தங்கி இருப்பது தெரிய வந்தது.

    உடனே அவர்களை பிடிக்க வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் ஜெயக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் புதுவண்ணாரப்பேட்டையில் ரவுடிகள் இருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். உள்ளே சென்று பார்த்த போது பட்டாகத்தி, வீச்சு அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் இருந்தனர். போலீசார் துப்பாக்கி முனையில் அவர்களை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்த கோபன், அப்பு செட்டிசன், பொன்னேரியை சேர்ந்த மணிகண்டன், தண்டையார்பேட்டையை சேர்ந்த பாலாஜி என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் வடசென்னையில் பிரபல ரவுடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் சேர்ந்து யாரை கொலை செய்ய திட்டம் தீட்டினர் என்பது தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    உள்ளாட்சி தேர்தலையொட்டி ரவுடிகள் அனைவரும் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்று வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×