search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு
    X

    பருவ மழை காலத்தில் அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு

    வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் விடுப்பில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் விடுப்பில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    காவல் துறையில் ஆயுதப்படைகள், சிறப்பு காவல் படை உள்ளிட்டவற்றை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும். இதற்காக தகுதியானவர்கள் அறிந்து, பணித் திட்டத்தை மாவட்டங்களில் வகுக்க வேண்டும்.

    அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட பேரிடர் மேலாண்மை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும், கிராமப்புற அளவில் கடலோர பேரிடர் தடுப்பு திட்டத்தின் கீழ் பேரிடர் திட்டங்களையும் வகுக்க வேண்டும்.

    பருவ மழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தகுந்த நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மீட்பு, பெருங்கூட்டத்தை கட்டுப்படுத்துவது, நிவாரணப் பணிகளில் உதவுதல் போன்றவற்றுக்கு பயிற்சி அளித்திட வேண்டும்.

    அனைத்து அரசு அலுவலர்களும், அதிகாரிகளும் எந்த நேரமும் பணி செய்திடும் வகையில் தயாராக இருக்க வேண்டும். குறுகிய காலத்தில் பணிகளை தெரிவித்தாலும் அதனை செய்திட தயாராக இருப்பது அவசியம். எனவே அவர்கள் விடுப்பில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    காவல் துறையின் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட அவசர கால மீட்பு பணிகளுக்கான மையத்துடன் தொடர்பில் இருக்கும்படி செய்ய வேண்டும்.

    பருவகால நிலை, கள நிலவரம் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள பயன்படுத்தப்படும் கருவிகள், எந்திரங்களை பராமரித்து, எந்த நேரமும் செயல்படும் நிலையில் இருக்க வேண்டும். அவசர கால பணிகளுக்கென வாகனங்களை தயார் நிலையில் வைத்திருப்பதுடன் போலீசார் சட்டம்-ஒழுங்கை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×