search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வால்பாறையில் தொடர் மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
    X

    வால்பாறையில் தொடர் மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

    வால்பாறையில் தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    வால்பாறை:

    வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு கிடைக்காமல் போனதால் பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் அடிப்படை அணையான சோலையார் அணைக்கு போதியளவு தண்ணீர் வரத்து கிடைக்காமல் போனது.

    இதனால் இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை காலத்தில் தனது முழு கொள்ளளவான 160 அடியை எட்ட வேண்டிய சோலையார் அதிகபட்சமாக 131 அடியை மட்டுமே எட்டியது. அதன்பின் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் சோலையார் மின் நிலையம்-1 மற்றும் 2 இயக்கப்பட்டு மின் உற்பத்திக்குப்பின் வெளியாகும் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கும் கேரளாவிற்கும் திறந்துவிடப்பட்டு வருகிறது. பரம்பிக்குளம் அணைக்கு செல்லும் தண்ணீர் மின் உற்பத்திக்காக சர்க்கார்பதி மின்நிலையம் இயங்குவதற்கு திறந்துவிடப்பட்டு மின் உற்பத்திக்குப்பின் வெளியாகும் ஆழியார் அணைக்கு சென்றுகொண்டிருக்கிறது. இதனால் பரம்பிக்குளம் அணையின் நீர் மட்டமும் குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளதால் ஓரளவிற்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது வால்பாறை பகுதியில் கடந்த 10 நாட்களாக நள்ளிரவு, அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் அவ்வப்போது கனமழையும் பல சமயங்களில் லேசான மழையும் பெய்துவருகிறது.

    நேற்றும் மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணிவரை வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சோலையார் அணையின் நீர்மட்டம் உயர்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×