search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீண்ட இழுபறிக்குப் பிறகு ராம் குமார் உடல் நாளை பிரேத பரிசோதனை: எய்ம்ஸ் டாக்டர் சென்னை வருகிறார்
    X

    நீண்ட இழுபறிக்குப் பிறகு ராம் குமார் உடல் நாளை பிரேத பரிசோதனை: எய்ம்ஸ் டாக்டர் சென்னை வருகிறார்

    ராம்குமார் உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துமவனையில் நாளை பிரேத பரிசோதனை செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
    சென்னை:

    சென்னை பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், கடந்த 18-ந் தேதி புழல் சிறையில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது திட்டமிட்டு செய்த கொலை என்றும், ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்கள் குழுவில், தங்கள் தரப்பு டாக்டர் ஒருவரையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ராம்குமாரின் தந்தை பரமசிவம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் இரு விதமான முடிவுகளை தெரிவித்தனர்.

    இதையடுத்து 3-வது நீதிபதி கிருபாகரன் இந்த வழக்கை விசாரித்தார். அவர், எய்ம்ஸ் மருத்துவர் ஒருவரின் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்.

    இதை ஏற்க மறுத்த பரமசிவம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலிடம் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு மூலம் விசாரிக்க முடியாது என்றும் இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டை அணுகும்படியும் அறிவுறுத்தினார்.

    இதையடுத்து பரமசிவம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. ராம்குமார் பிரேத பரிசோதனையின்போது தங்களது தரப்பு தனியார் மருத்துவரை கண்காணிப்பதற்காக அனுமதிக்க வேண்டும் என்றும் அதற்கு பிறகு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    ஆனால், இந்த மனுவை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், பரமசிவத்தின் மனுவை தள்ளுபடி செய்தது. எனவே, உயர்நீதிமன்ற உத்தரவின்படி எய்ம்ஸ் டாக்டர் முன்னிலையில் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை நடப்பது உறுதியானது.

    இந்நிலையில், ராம்குமார் உடலை பரிசோதனை செய்வதற்கு எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் கே.குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் 5 டாக்டர்கள் கொண்ட குழு, ராம்குமார் உடலை நாளை பிரேத பரிசோதனை செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக இன்று இரவு டாக்டர் சுதிர் கே.குப்தா சென்னை வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×