search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வரின் உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கருணாநிதி அறிக்கை
    X

    முதல்வரின் உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கருணாநிதி அறிக்கை

    முதல்வரின் உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு வார காலத்திற்கும் மேலாக கடந்த 22-ம் தேதி முதல், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு ஆகியவற்றுக்கு சிகிச்சை பெற்று குணம் அடைந்து வருவதாகவும், ஆனாலும் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையிலே இருக்க வேண்டுமென்று அப்பல்லோ மருத்துவமனை தெரிவிப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

    அதே நேரத்தில் முதல்-அமைச்சர் மருத்துவமனையில் இருந்தவாறே காவிரி பற்றி ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகவும், டெல்லியில் அவர் ஆற்ற வேண்டிய உரையினை அவரே “டிக்டேட்” செய்ததாகவும் செய்தி வருகிறது.

    மருத்துவமனையிலேயே ஆலோசனை நடத்திய புகைப்படம் எதுவும் வெளியிடப்படவில்லை. மருத்துவமனையிலே அவர் எவ்வாறு இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள, அவருடைய கட்சியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பரிதவிப்பிலும், குழப்பத்திலும் இருக்கிறார்கள்.

    அப்பாவித் தொண்டர்களுக்காகவாவது ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கின்ற புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டு குழப்பத்தைப் போக்கிட யாரும் முன் வரவில்லை.

    ஒரு வாரத்திற்கு மேல் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சரை தமிழக ஆளுநர் இதுவரை நேரில் சென்று பார்க்கவில்லை. ஏன், அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சித் தலைவர்கள் கூட அவரைக் கண்டு பேசியதாக செய்தி வரவில்லை.

    இவ்வாறு ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றிய செய்தி யாருக்கும் தெரிந்துவிடக் கூடாதென்று மூடு மந்திரமாக வைத்திருப்பதால், ஒரு சிலர் வேண்டுமென்றே விரும்பத்தகாத செய்திகளை எல்லாம் வதந்திகள் மூலமாகப் பரப்பி வருகிறார்கள்.

    அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற வகையிலாவது சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சரின் புகைப்படத்தை வெளியிட்டிருக்க வேண்டும்.

    மேலும் முதல்-அமைச்சர் இத்தனை நாட்கள் மருத்துவமனையிலே சிகிச்சை பெறுவது பற்றி மரபுகளை அனுசரித்து முறைப்படி மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பிலே உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரோ, தலைமைச் செயலாளரோ இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் செய்யவில்லை.

    இந்த வதந்திகளுக்கு முடிவு கட்டிடும் வகையிலாவது தமிழக அரசின் சார்பில் முதல்-அமைச்சரின் உடல் நிலை குறித்து தக்க ஆதாரங்களோடு செய்தியாளர்கள் வாயிலாக நல்ல தகவலை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க முன் வர வேண்டும்.

    முதல்-அமைச்சருக்கு கடந்த ஒரு வார காலமாக காய்ச்சல் நீடிக்கிறது என்றால், முறைப்படி மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவில் யார் யார் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது நாட்டிற்கு இதற்குள் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த மருத்துவக்குழுவின் சார்பில் அடிக்கடி முதல்வரின் உடல் நிலை குறித்து உண்மைத் தகவலை மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

    முதல்-அமைச்சரின் உடல் நிலை குறித்து, ஜெயலலிதாவே காணொலி மூலமாக மக்களுக்கு காட்சி தர வேண்டுமென்று ஒரு சில நாட்களுக்கு முன்பு பா.ம.க. நிறுவனர், டாக்டர் ராமதாஸ் அறிக்கையே கொடுத்திருந்தார். அதற்கும் அரசின் சார்பில் எந்த விதமான விளக்கமும் தரப்படவில்லை.

    அரசு அலுவல்களை எல்லாம் முதல்வர் மருத்துவமனையிலிருந்தே ஆற்றி வருகிறார் என்பது போன்ற செய்திகள் வருவதால், அவருடைய புகைப்படத்தை எடுத்து ஏடுகளில் வெளியிடுவதில் எந்தத் தவறும் இருக்க முடியாது.

    நான் ஏற்கனவே என்னுடைய அறிக்கையில் தெரிவித்தவாறு, எனக்கும் அவருக்கும் இடையே கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், அவர் விரைவில் முழு நலம் பெற்று, எப்போதும் போல தனது பணிகளைத் தொடர்ந்திட வேண்டும் என்பது தான் எனது உளப்பூர்வமான விருப்பமாகும்.

    எனவே அவர் விரைவிலே முழு உடல் நலம் பெற வேண்டுமென்ற எனது விழைவினைத் தெரிவிக்கும் அதே நேரத்தில், வதந்திகளுக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசின் நிர்வாகம் செயல்பட வேண்டுமென்றும்; அதற்கேற்ற ஏற்பாடுகளைத் தமிழக ஆளுநர் கையிலெடுக்க வேண்டுமென்றும்; தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்பதால் அதனை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×