search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை-பெங்களூர், சென்ட்ரல்-அகமதாபாத் உள்பட 9 புதிய ரெயில்கள் அறிவிப்பு
    X

    கோவை-பெங்களூர், சென்ட்ரல்-அகமதாபாத் உள்பட 9 புதிய ரெயில்கள் அறிவிப்பு

    நடப்பு ஆண்டிற்கு கோவை-பெங்களூர், சென்ட்ரல்-அகமதாபாத் உள்பட 9 புதிய ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. தெற்கு ரெயில்வே அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பொது மேலாளர் வசிஷ்ட ஜோர்ரி வெளியிட அதனை தலைமை செயல் மேலாளர் பெற்றுக்கொண்டார்.

    அதில் தெற்கு ரெயில்வேயில் நடப்பு ஆண்டிற்கு 9 புதிய ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே பொது மேலாளர் வசிஷ்டஜோர்ரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் ஹம்சாபர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை புறப்பட்டு செல்லும். இந்த ரெயில் விடப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    திருச்சி- ஸ்ரீகங்கா நகர் இடையே வாராந்திர புதிய ரெயில் விடப்படுகிறது. இந்த ரெயில் திருச்சியில் இருந்து வியாழக்கிழமை தோறும் புறப்பட்டு செல்லும்.

    இந்த ரெயில் சேலம், நாமக்கல், கரூர், பங்காரு பேட்டை வழியாக செல்கிறது.

    சென்னை சென்ட்ரல் - சந்திரகாசி இடையே வாராந்திர ரெயில் விடப்படுகிறது. இந்த ரெயில் புதன்கிழமை தோறும் சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு செல்லும். இந்த ரெயில் சூலூர் பேட்டை, கூடூர், நெல்லூர், விஜயவாடா வழியாக செல்கிறது.

    எர்ணாகுளம்- ஹவுரா அந்தோதியா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வாரம் ஒருமுறை விடப்படுகிறது. இந்த ரெயில் எர்ணாகுளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை தோறும் புறப்பட்டு செல்லும்.

    கோயம்புத்தூரில் இருந்து கே.எஸ்.ஆர். பெங்களூருக்கு உதய் எக்ஸ்பிரஸ் புதியதாக இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும். திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் கோவையில் இருந்து புறப்பட்டு செல்லும். இதற்கான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும்.

    எர்ணாகுளம் - ஹட்டியா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வாரம் ஒரு முறை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் எர்ணாகுளத்தில் இருந்து வியாழக்கிழமை தோறும் இயக்கப்படும்.

    புவனேஸ்வர் - கிருஷ்ணா ராஜபுரம் இடையே வாராந்திர புதிய ரெயில் விடப்படுகிறது. இந்த ரெயில் திங்கட்கிழமை தோறும் புவனேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.

    ஹவுரா - யஷ்வந்த்பூர் இடையே சூப்பர் பாஸ்ட் வாராந்திர ரெயில் விடப்படுகிறது.

    இந்த ரெயில் செவ்வாய்க்கிழமை தோறும் ஹவுராவில் இருந்து புறப்பட்டு செல்லும்.

    கமக்யா- பெங்களூர் கண்டோண்ட்மென்ட் இடையே சூப்பர் பாஸ்ட் வாராந்திர ரெயில் புதிதாக இயக்கப்பட உள்ளது.

    கமக்யாவில் இருந்து செவ்வாய்க்கிழமை தோறும் இந்த ரெயில் புறப்பட்டு செல்லும். புதிய ரெயில் இயக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×